முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் சிறந்த முறையில் இடம்பெறவேண்டும் | தினகரன்

முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் சிறந்த முறையில் இடம்பெறவேண்டும்

முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் சிறந்த முறையில் இடம்பெறவேண்டும்-Management Assistant Transfer Must be Fair

 

கடந்த வருடம் அக்கரைப்பற்று கல்வி வலயம் பொடுபோக்கு
- பிரதிப் பிரதம செயலாளருக்கு கடிதம்

2018 ஆம் ஆண்டுக்குரிய முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் கடந்த காலங்களைப் போலல்லாது சிறந்த முறையில் இடம்பெறவேண்டும் எனவும், இம்முறை நடைபெறவுள்ள இடமாற்ற சபைத் தீர்மானம், சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென, அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாறக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கிழக்கு மாகாண நிருவாகத்திற்கான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்காவிற்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டுக்குரிய முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் கடந்த காலங்களைப் போலல்லாது சிறந்த முறையில் இடம்பெறவேண்டும் எனவும், இம்முறை நடைபெறவுள்ள இடமாற்ற சபைத் தீர்மானம், சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

கடந்த வருடம் முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் அர்த்தமற்றதாகிப் போயிருந்தது. இடமாற்ற சபைக் கூட்டத் தீர்மானம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இடமாற்றக் கட்டளை பெற்றவர்களில் சிலர் உரிய காலப் பகுதியில் விடுவிக்கப்படாமல் பிந்தி விடுவிக்கப்பட்டதுடன், மேலும் சிலர் இன்று வரை விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர்.

பதிலாள் வருகின்ற போது உரிய ஆள் விடுவிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்ட ஆளினால் மாத்திரமே இந்தவேலைகள், செய்ய முடியும், வேறு ஆட்களினால் இந்த வேலைகள் செய்ய முடியாது என்றும் புதிதாக வருபவர் வேலை செய்யமாட்டார் என்றும் இன்னும் இது போன்ற பல அடிப்படையற்ற காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், கடந்த வருடம் இடமாற்றம் பெற்றவர்களை விடுவிப்பு செய்வதில் மிகவும் பொடுபோக்கு காட்டியிருந்தது. இதனால் அங்கு கடமையாற்றியவர்களில் இடமாற்றக் கட்டளைக்கமைய செல்ல வேண்டியவர்களும், அங்கு வரவேண்டியவர்களும் என இருசாராரும் பல்வேறு கஸ்டத்திற்குள்ளாகியிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விடுவிப்பினை உரிய காலத்தில் செய்யாமல், இரண்டொரு மாதங்கள் பிந்தி செய்வதனால், அவ்வாறு செல்பவர்கள் புதிதாக சென்ற இடத்திலிருந்து 5 வருடம் நிறைவடைந்தபின் மீண்டும் இடமாற்றம் பெறுவதற்கு, விண்ணப்பிக்க வேண்டிய காலத்தில் குறிப்பிட்ட இரண்டொரு மாதங்கள் குறைவாக இருப்பதனால், இன்னும் ஒரு வருடம் தாமதிக்கின்றனர் என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு அலுவலகத்தில் இரண்டு வருடங்கள் கடமையாற்றியவர்கள் தன்னுடைய வசதிக்கும் தேவைக்குமமைய இடமாற்றம் கோரலாம் என்று பொதுச்சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியிருந்தும், இவ்வாறு இரண்டு வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களது விண்ணப்பங்கள் சில நிறுவனத் தலைவர்களால் சிபார்சு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. அவர்களது விண்ணப்பங்களும் இடமாற்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பாலமுனை விசேட நிருபர் - ஏ.எல். றியாஸ்)
 


Add new comment

Or log in with...