அமைச்சர் ரிஷாட் அனுதாபம்
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியல் விஞ்ஞானத் துறை பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் (67) காலாமானார்.
அவர் இன்று (25) யாழ். பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த அவர், ஒரு ஆண் மற்றும் இரு பெண்குழந்தைகளின் தந்தையாவார்.
சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ், சமூக ரீதியான செயற்பாடுகள், இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிக அக்கறையுள்ள சமூக ஆர்வலராவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாக பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி (MA, Ph.D.) பட்டங்களையும் பெற்றார்.
முசலி தெற்கு மீள்குடியேற்றம் மற்றும் வில்பத்து சர்ச்சை தொடர்பிலான "Denying the Right to Return" (மீள்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு) எனும் நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்
சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருகின்றது.
முஸ்லிம் சமூக ஆய்வாளரும், சிறந்த சிந்தனாவாதியும் பன்னூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம் வெளியிட்டுள்ளார்.
கல்வித்துறையிலும், சமூக ஆய்விலும் அன்னாரது அனுபவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், மன்னார் மண்ணுக்கு பெருமை தேடித் தந்த ஒரு கல்விமான். இவர் பன்முக ஆளுமை படைத்தவர்.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” ஒன்றை தொடங்குவதில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்து, பின்னர் இந்த அமைப்பின் ஊடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த அரும்பாடுபட்டவர். இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை நூல் வடிவில் கொண்டு வந்தவர்.
வில்பத்துப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட போது, அது தொடர்பில் நூலொன்றை வெளியிட்டு உண்மை நிலையை பிற சமூகத்திற்கு தெளிவு படுத்துவதில் பகீரத பிரயத்தனம் செய்தார்.
தேசிய மீலாத் விழா தொடர்பான நூலொன்றை ஆக்கும் பணியை அவரிடமே ஒப்படைத்திருந்தோம். இறுதியாக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தில் நானும் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் சிலரும் அவரைச் சந்தித்த வேளை, அந்த நூலின் ஆரம்ப வேலைகளைத் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் பணியை திறம்படச் செய்து தருவேனென்றும் எம்மிடம் தெரிவித்தார்.
மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்பினராக இருந்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பைப் பேண அவர் காட்டிய அக்கறையையும் தொடர்ச்சியான உழைப்பையும் இந்த கவலையான சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கிறோம். அதுமட்டுமன்றி எல்லை நிர்ணயம் தொடர்பில் தனியான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்து முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்தவர்.
அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றோம். என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
There is 1 Comment
Professor H.Hazbullah
Pages
Add new comment