தீர்வு கிட்டவில்லை; புகையிரத ஊழியர்கள் பணி புறக்கணிப்புக்கு | தினகரன்

தீர்வு கிட்டவில்லை; புகையிரத ஊழியர்கள் பணி புறக்கணிப்புக்கு

தீர்வு கிட்டவில்லை; புகையிரத ஊழியர்கள் பணி புறக்கணிப்புக்கு-Railway Staff to Commence Strike on Aug 29

 

புகையிரத பணியாளர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இம்மாதம் 29 ஆம் திகதி (புதன்கிழமை) மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, புகையிரத ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக, பல்வேறு கட்டங்களில் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இறுதியாக, கடந்த ஓகஸ்ட் 08 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி முதல் புகையிரத சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட புகையிரத துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து, எவ்வித முன்னறிவிப்பின்றி 4 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து, இரு மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் வகையில் குறித்த ஆணைக்குழுவை நியமிக்க, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.


Add new comment

Or log in with...