கிழக்கின் தொன்மைமிகு பாரம்பரியத்தை இன்றும் பேணும் மண்டூர் முருகன் ஆலயம் | தினகரன்

கிழக்கின் தொன்மைமிகு பாரம்பரியத்தை இன்றும் பேணும் மண்டூர் முருகன் ஆலயம்

தீர்த்தோற்சவம் நாளை

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும், அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும், இயற்கையோடு இயைந்த வழிபாட்டையும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கு உண்டு. இதே சிறப்பியல்புகள் இப்பிரதேசத்திற்கு அப்பால் கதிர்காமத்திலும் பேணப்படுகின்றன. மட்டக்களப்பின் தென்கோடியில் சுமார் 30 மைல் தொலைவில் பரந்த வாவிக்கரையில் அமைந்துள்ள ஊரே மண்டூராகும்.

பண்டைய காலத்தில் இருந்து தில்லை மரங்கள் இக்கோயிற் பகுதியில் அதிகமாக இருந்தமையினால் கவிஞர்களும், பக்தர்களும் இவ்விடத்ததை 'தில்லை மண்டூர்' என்றே வழங்குகின்றனர்.

கிழக்கிலங்கையில் மிகவும் ப​ைழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் 'திருப்படைக் கோயில்கள்' என்றும் அழைக்கப் பெற்றன. பண்டைய அரசனின் மதிப்பு,மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயில்களே இவை. அதனால் இதனை 'தேசத்துக்கோயில்' என்றும் அழைப்பர்.

சீர்பாததேவியும் அவருடன் வந்தவர்களும் வீரமுனையிலே வந்திறங்கி விநாயகருக்கு ஆலயம் அமைத்த போது, அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த வேலையும் அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலை எடுத்து வந்து மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து விட்டு துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான்.

தில்லைமரத்தடியில் வேலைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டனர். இதன் பின்னர் சிந்தன் தான் கொண்டு வந்த தங்கவேல் அங்கு கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடுவதை அறிந்து தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான்.

பின்னர் இவர்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு 'தில்லைமண்டூர் முருகன் ஆலயம்' என நாமம் சூட்டி வழிபட்டனர்.

சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஆலயத்தில்ஆவணிமாதப் பூரணையில் அன்று தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னருள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும்.

இக்கொடியேற்றம் வெல்லாவெளி பிரதேச செயலாளர், நான்கு வண்ணக்கர்மாரிடம் சம்மதம் கேட்ட பின்னரே நடைபெறுவது வழக்கமாகும். 11ம் திருவிழா தொடக்கம் 20ம் திருவிழாக்கள் வரை சுற்று வட்டத் திருவிழாக்கள் காலையும், மாலையும் நடைபெறும்.

11ம் நாள் திருவிழாவின்போது ஞானி குடிமக்கள் புஸ்பவிமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்காளாக உள்ளனர். 12ம் திருவிழா குருமண்வெளி, வீரமுனை, மண்டூர் மக்களால் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் 13ம், 15ம், நாட்களில் துறைநீலாவணை மக்களும், 14, 16ம் திருவிழா குருமண்வெளி மக்களாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் தீர்த்த உற்சவத்தின் பிறகு தீர்த்தக்கரையில் நான்கு ஊர் மக்களும் கௌரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மஞ்சட்காப்பு மாலையும், பட்டு தீர்த்தமும் வழங்கப்பட்டு அம்மக்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

கடந்த 06 ஆம் திகதி இரவு கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ச்சியாக இருபது நாள் திருவிழா இடம்பெற்று வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது. 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டு வாவியினை அண்மித்து அமையப் பெற்றுள்ள இவ்வாலயம் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் பெட்டகங்களிலிருந்த ஆலயத்துக்குரிய ஏட்டுப்பிரதிகள், ஆவணங்கள் நீரில் சேதமுற்ற நிலையில் இருந்ததனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் மண்ணுக்குள் புதைந்ததாக முன்பிருந்த ஊடாக அறியமுடிகிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் தல விருட்சம் இருப்பது போன்று அதாவது சிதம்பரத்தின் தல விருட்சமாக குருந்தை மரம் அமைய இவ்வாலயத்தின் தல விருட்சமாக தில்லைமரம் திகழ்கிறது.

நாகர்களுக்குள் இருந்த மண்டூ நாகன் எனும் தலைவன் இந்த ஊர் மக்களை மற்றும் ஆலயத்தை நெறிப்படுத்தியதாலும் இப்பிரதேசம் மண்டூர் மரங்கள் நிறைந்த மண்டூச் சோலையாக இருந்ததனாலும் இவ்வூர் 'மண்டூர்' என அழைக்கப்படலாயிற்று.

அந்தக் காலத்தில் வன்னிமைகளைச் சேர்ந்த வன்னியர்கள் கூட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதுடன் ஆலயக் கொடியேற்றம் தொடர்பாக முழுப் பொறுப்புகளையும் உடையவர்களாக காணப்பட்டனர். வன்னிமைக் காலத்திற்கு முற்பட்ட பதினான்காம் நூற்றாண்டுக்குரிய கோயிலாகவும் வன்னியர்களின் நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயமாகவும் இவ்வாலயம் கருதப்படுகிறது.அரசர்களின் காலத்தில் வன்னியர்கள் பிரதானிகளாக நியமிக்கப்பட்டதுடன் குளக்கோட்டனின் மனைவியான ஆடகசவுந்தரியின் காலத்தில் மண்டூர் முருகன் ஆலய வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

திருக்கோயில்,வீரமுனை பிள்ளையார் கோயில்,கோவில்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி கோயில்,கொக்கட்டிச்சோலை, அமிர்தகழி, மண்டூர் ஆகிய கோயில்களை அவர் தரிசித்ததாக அறியக் கூடியதாகவுள்ளது.

சிங்கள அரசர்களின் காலத்தில் இக்கோயில் இருந்துள்ளது.உதாரணமாக கபாடக்காரன்,கங்காணி சொற்பதங்களை வைத்து அறிய முடிகிறது.

திருக்கோயில், வெள்ளநாவல்மரம்,சித்தாண்டி,வெருகல்,உகந்தை மற்றும் மண்டூர் என ஆறு இடங்களில் முருகவேல் இருந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஊடாக அறியமுடிகிறது.

365 நாட்களும் மூன்று வேளைகளிலும் பூசை நடைபெறும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வளாக முகப்புத் தோற்றம் மட்டு வாவியினை நோக்கியவாறு அமைந்துள்ளதுடன் மட்டு மூங்கிலாறே தீர்த்தோற்சவ களமாக திகழ்கிறது.

 

நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்),
பா.மோகனதாஸ்
(மண்டூர் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...