ஜனநாயகப் போர்வையில் சிறுபான்மையை ஒடுக்குவதை ஏற்கவே முடியாது | தினகரன்

ஜனநாயகப் போர்வையில் சிறுபான்மையை ஒடுக்குவதை ஏற்கவே முடியாது

சிறுபான்மை இனத்தவர்களை ஜனநாயக ரீதியாக ஒடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்ப்பதாயின் யாருடைய நலனுக்காக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும்தமிழ், முஸ்லிம் சமூகங்கள், மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை ஒடுக்கும் வகையில் இந்த எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டினார்.

சிறிய தேசிய இனங்கள் ஏற்கனவே பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஜனநாயக ரீதியில் அவற்றை மேலும் ஒடுக்க மாகாணசபைக்கான எல்லை நிர்ணய அறிக்கையின் மூலம் மீண்டும் முயற்சிக்கப்படுகிறது.

இதற்கு இடமளிக்காத வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவங்கள் உறுதிசெய்யப்படும் வகையில் எல்லை நிர்ணயம் தயாரிக்கப்படுவது அவசியமாகும் என்றும் கூறினார்.

மாகாணசபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

எல்லைநிர்ணய அறிக்கையானது அனுபம் மிக்க தலைவர் ஒருவரின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் தேர்தல் கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம் பலம்வாய்ந்த, சமத்துவம் மிக்கதாக இருப்பது அவசியமாகும்.

மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகள் தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான யோசனைகளை சமர்ப்பித்திருந்தன. எனினும், எல்லைநிர்ணய ஆணைக்குழு அந்த யோசனைகளைக் கவனத்தில் எடுக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளது. பொது எதிரணியும் எதிர்க்கிறது. இவ்வாறான நிலையில் இந்த அறிக்கை யாருடைய நலனுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...