தேர்தல் முறையில் இனவாதத்தை கொண்டுவரக் கூடாது | தினகரன்

தேர்தல் முறையில் இனவாதத்தை கொண்டுவரக் கூடாது

தேர்தலை பிற்போடுவதே எதிர்ப்பவர்களின் இலக்கு

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் முறையைத் தீர்மானிக்கும் அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அனைவரினதும் நோக்கம் தேர்தலைப் பிற்போடுவதாகும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேர்தலை நடத்தாதிருப்பதற்கான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தில் பாரிய ஊழல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெறுவதாக அரசாங்கத்தின் அமைச்சரான பீல்ட் மார்ஷல் பொன்சேகாவே கூறியுள்ளார். அரச வளங்களை விற்பனை செய்வது, மோசடிகள் போன்றவற்றால் பாரிய விமர்சனங்களுக்கு அரசு முகங்கொடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் மக்களுக்கு முகங்கொடுக்க முடியாது தப்பித்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

மோசமடைந்துள்ள அல்லது வீழ்ச்சியடைந்துள்ள அரசியல் கலாசாரத்தை தேர்தல் முறையை மாற்றுவதன் ஊடாக சீர்செய்ய முடியும் என நாம் கூறவில்லை. இந்த நிலைமை அரசியல் கலாசாரத்தின் ஊடாகவே மாற்றப்பட வேண்டும். வர்த்தகமாக மாறியுள்ள அரசியல் மக்கள் சேவையாக மாற்றுவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய விவாதத்தை நடத்துவதற்கு ஏப்ரல் மாதத்தில் நேரம் ஒதுக்கியபோதும் பிரதமரின் நேரடி தலையீட்டினால் விவாதம் நடத்தப்படவில்லை. புதிய கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் எமது கட்சிக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். எனினும், இனத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் முறை தீர்மானிக்கப்படும் அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவிருக்கின்றோம். இதனாலேயே புதிய முறைக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மீண்டும் முயற்சிக்கிறது.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...