கர்நாடக முதல்வரின் கணக்காளரான பட்டய கணக்காளரின் வீட்டில் வருமான வரி சோதனை | தினகரன்

கர்நாடக முதல்வரின் கணக்காளரான பட்டய கணக்காளரின் வீட்டில் வருமான வரி சோதனை

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கணக்காளர் ஹெச்.பி.சுனில். பெங்களூரைச் சேர்ந்த பட்டய கணக்காளரான இவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மகன் நிகில், சகோதரரும் அமைச்சருமான ரேவண்ணா உள்ளிட்டோருக்கும் கணக்காளராக உள்ளார். இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சுனிலின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வருமான வரித் துறை அதிகாரிகள், குமாரசாமியின் குடும்பம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள னர். குறிப்பாக கஸ்தூரி தொலைக்காட்சி மற்றும் கஸ்தூரி ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அனிதாவின் நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மே மாத இறுதியில் சுனில் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...