பாடகர் உன்னிமேனன் மகனின் திருமண பணம்; வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு | தினகரன்

பாடகர் உன்னிமேனன் மகனின் திருமண பணம்; வெள்ள நிவாரணத்துக்கு வழங்க முடிவு

பாடகர் உன்னிமேனன் தன் மகனின் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கவுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன். ரோஜா படத்தில் ‘புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது,’ கருத்தம்மா படத்தில் ‘போறாளே பொன்னுத்தாயி,’ ரிதம் படத்தில் நதியே நதியே, ஷாஜஹான் படத்தில் ‘மின்னலை பிடித்து மின்னலை பிடித்து’ உட்பட பல பாடல்களை பாடி உள்ளார்.

பாடகர் உன்னிமேனன் மகன் அங்குர் உன்னிக்கும் துபாயை சேர்ந்த கவிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்‌ஷன் சென்டரில் அடுத்த மாதம் 20–ந்திகதி திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமணத்துக்கு 2,500 பேரை அழைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கடுமையான மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து திருமணத்தை எளிமையாக நடத்தப்போவதாக உன்னிமேனன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘எனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து கடந்த 9 மாதங்களாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். இப்போது கேரளா மழை வெள்ளத்தில் சிக்கி சோகத்தில் இருக்கும்போது திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லை.

எனவே ஏற்கனவே முடிவு செய்திருந்த நாளில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்துகிறோம். திருமண செலவுக்கு வைத்திருந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம்.’’

இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...