Friday, March 29, 2024
Home » இலங்கை மக்களின் புலம்பெயர் கனவுகள்!

இலங்கை மக்களின் புலம்பெயர் கனவுகள்!

by Rizwan Segu Mohideen
November 25, 2023 7:04 am 0 comment

எமது நாட்டு மக்களில் பலர் இக்காலத்தில் மேற்குநாட்டு வாழ்க்கை மீதான ஆர்வத்தில் உள்ளதைக் காண முடிகின்றது. ஏதேனுமொரு மேற்கு நாட்டுக்குப் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதற்கே ஏராளமானோர் விரும்புவது தெரிகின்றது. அதேசமயம் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து செல்வதற்கு இளவயதினர் மாத்திரமன்றி வயது வந்தவர்களும் பெரிதும் ஆர்வம் காட்டுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இலங்கை மக்களில் பலரின் உள்ளக்கிடக்கை இவ்வாறிருக்கையில், கனடா போன்ற தேசங்களில் வாழ்கின்ற இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் மக்களிடமிருந்து வருகின்ற செய்திகளோ வேறுவிதமாக உள்ளன. இரண்டு தசாப்த காலத்துக்கு முன்னர் இலங்கையிலிருந்து யுத்த அச்சம் காரணமாக மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து சென்ற மேற்படி தமிழர்களிடமிருந்து வருகின்ற செய்திகள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.

‘மேற்கு நாட்டுக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். நீங்கள் கனவு காண்பதைப் போன்று தற்போது எதுவுமே இங்கு இல்லை. புலம்பெயர்ந்து வந்த பின்னர் வேதனைப்படாதீர்கள்!’ என்று கனடா, இங்கிலாந்து போன்ற பல்வேறு தேசங்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் இப்போது கூறுகின்றார்கள்.

உண்மையில் அந்நாடுகளின் நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது என்பதை முதலில் ஆராய வேண்டியது அவசியம். ஏனெனில் இலங்கையில் இருந்து முன்னரெல்லாம் வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மாத்திரமே ‘யுத்த அகதிகள்’ என்ற பெயருடன் புலம்பெயர்ந்து சென்றனர். அவர்களை அரவணைப்பதற்கு மேற்குலகின் பல நாடுகள் தயாராகவும் இருந்தன.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு நிகராக, நாட்டின் அனைத்து இன மக்களும் மேற்குலக வாழ்க்கையில் பெரிதும் நாட்டம் காட்டுவதைக் காண முடிகின்றது. சிங்கள் மக்களிலும் இயலுமானவர்கள் வகைதொகையின்றி மேற்குலக நாடுகளுக்குப் படையெடுப்பதைக் காண முடிகின்றது. அவர்கள் இப்போது ‘பொருளாதார அகதிகள்’ என்ற நாமத்துடன் புலம்பெயர நினைக்கின்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் மேற்குலக நாடுகளுக்குச் சென்று வசதிவாய்ப்புகளுடன் வாழலாமென்று அவர்கள் கனவு காண்கின்றார்கள்.

இங்கு இரு விடயங்கள் முக்கியமானவையாகும். அவர்கள் நினைப்பதைப் போன்று இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவவில்லை. முன்னர் நிலவிய தீவிரமான பொருளாதார நெருக்கடியில் இருந்து எமது நாடு பெருமளவில் மீண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி எதிர்காலத்தில் நீங்குவதற்கான சாதகமான அறிகுறிகள் தென்படுகின்றன.

இரண்டாவது விடயம் மேற்குலக நாடுகளில் தற்போது நிலவுகின்ற பாதகமான நிலைமைகள்! அந்நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகள் உருவாகத் தொடங்கி விட்டன. அன்றாடம் சாதாரணமாக வாழ்வதென்றாலும் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இளவயதினராயின் ஓய்வின்றி உழைக்க முடியும். ஆனால் வயது சென்றவர்கள் அவ்வாறு உழைப்பதென்பது சாத்தியமில்லை.

மற்றவர்களின் தயவிலேயே வயதானவர்கள் வாழ வேண்டியேற்படும். இவ்வாறான வாழ்க்கை எத்தனை காலத்துக்கு நீடிக்கப் போகின்றது? அதுமாத்திரமன்றி இங்குள்ளவர்கள் கற்பனை செய்வதைப் போன்று தொழில்வாய்ப்புகளெல்லாம் அந்நாடுகளில் பெரிதும் அருகிப் போய் விட்டன. தொழில் தேடும் படலம் மோசமாகச் சென்று கொண்டிருக்கின்றது. ‘தாய்நாட்டைக் கைவிட்டு புலம்பெயர்ந்து வந்தது புத்திசாலித்தனமான முடிவுதானா?’ என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்கும் நிலைமையொன்றுக்கு பலர் ஆளாகியுள்ளதையே காண முடிவதாக அங்கு சென்ற பலர் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலைமைகளையெல்லாம் வைத்துப் பார்க்கையில், மேற்குலகப் புலம்பெயர்தல் என்பது எதிர்காலத்துக்குப் பொருந்தப் போவதில்லையென்பது நன்றாகவே தெரிகின்றது. தாய்நாட்டை விட்டுப் புறப்படவிருப்போர் ஒருகணம் நிதானமாகச் சிந்திப்பது அவசியமாகின்றது.

இலங்கை எமது தாய்நாடென்பதை இந்நாட்டு மக்கள் எவருமே மறந்து விடலாகாது. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு இலங்கை ஆகும். வெளிநாட்டினரே எமது நாட்டின் இயற்கை அழகை மிகவும் புகழ்ந்துரைக்கின்றனர். இலங்கையை நோக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தர விரும்புவதற்குக் காரணமும் இலங்கையின் இயற்கை வனப்பு ஆகும்.

அவ்வாறானதொரு நாட்டை எம்மால் வெறுத்தொதுக்க முடியாது. கடந்த கால அரசாங்கங்கள் தவறிழைத்து விட்டனவென்பதை மறுக்கவியலாது. அத்தவறுகள் காரணமாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கியதென்பதையும் மறுப்பதற்கில்லை.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ஆற்றல் மறைந்து கிடக்கின்றது. அரச உத்தியோகம்தான் வாழ்க்கைக்கான ஆதாரம் என்று நினைப்பது தவறு. எமக்குள்ள ஆற்றல்களை வைத்து தாய்நாட்டிலேயே உழைத்து வாழ்வதே இன்பம் என்பதுதான் யதார்த்தம் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT