அறிக்கை 2/3 கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம் | தினகரன்


அறிக்கை 2/3 கிடைக்காவிடின் மாற்று வழியில் நிறைவேற்றுவோம்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கைக்கு இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதனை மாற்று வழியில் நிறைவேற்றுவோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு முறையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் நேற்று வலியுறுத்தினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"எல்லை நிர்ணய அறிக்கையை வாசித்த பின்னரே அதனை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஆனால் தேர்தல் நடத்தப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை விவாதத்துக்கு எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல. அவ்வாறு எடுக்க முடியாமல் போனால் அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்ற மாற்றுவழியை நாம் கையாள்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.

சபாநாயகரால் பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு மாத காலத்துக்குள் ஜனாதிபதிக்கு முன்வைக்கும் அறிக்கையில், எல்லை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டால் இதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படாது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டது போல் மாகாணசபைத் தேர்தலும் புதிய முறையில் நடத்தப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமென சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசியலமைப்புச் சபையை கோரவுள்ளதாகவும் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...