கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும் | தினகரன்

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும்

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து மலேசிய எழுத்தாளர்களுடன் சென்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் "கருணாநிதி பிறந்த நாளை உலகத் தமிழர்கள் கலைஞர் செம்மொழித் திருநாளாகக் கொண்டாட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து, மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன் மற்றும் மலேசிய எழுத்தாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்க் காதல் மிக்க தமிழர்கள் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார்கள். உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தமிழ் அடையாளமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

உலகத் தமிழர்கள் கருணாநிதியை எவ்வளவு நேசித்தார்களோ கருணாநிதியும் அவ்வண்ணம் நேசித்தார். திராவிட இயக்கமே ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கான இயக்கம். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்பதற்கு காரணம் கற்பனையாகச் சொல்லப்போனால், சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் போன தமிழர்கள் அழுது அழுது வடித்த கண்ணீர்தான் காரணம் என்று அண்ணா சொன்னார். அதை கருணாநிதி பராசக்தியில் நினைவூட்டி உலகத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர். அவரது நினைவுகளை உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். மலேசியாவிலிருந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கும் தமிழ் அன்பர்கள் அஞ்சலி செலுத்தி அவர்களின் ஓரக் கண்கள் ஈரமானபோது நமக்கும் கண்ணீர் பீரிடுகிறது.

அவரது புகழ் வளர வேண்டும். உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை உலகத் தமிழர்கள் கருணாநிதியின் பிறந்த நாளை கலைஞர் செம்மொழி திருநாள் என்று கொண்டாட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதை உலகத் தமிழர்கள் ஏற்றுச் செயல்படுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். கருணாநிதி மறைந்துவிட்டார் என்பது ஒரு பௌதீக உண்மை. ஆனால் இலட்சியங்கள் மரிப்பதில்லை. ஒரு அழகான பழமொழி உண்டு. விதைத்தவன் உறங்கிவிடுகிறான். ஆனால் விதைகள் உறங்குவதில்லை. கருணாநிதி இந்த கடற்கரையில் தூங்குகிற கடலாக தூங்கிக்கொண்டிருக்கலாம்.

அவரது எழுத்தும் சொல்லும் செயலும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்துக்கொண்டே இருக்கும் என்பது எங்கள் எண்ணம்.

உலகத் தமிழர்கள், குறிப்பாக மலேசியத் தமிழர்கள் அன்புக் காணிக்கையில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன். பாரத ரத்னா விருதுக்கு கருணாநிதி முற்றிலும் தகுதியானவர் என்பதை மத்திய அரசே உணரும் என்பது எனது கருத்து. கருணாநிதியின் இலட்சியங்கள், உழைப்பு, கருணாநிதியின் பேரன்பு மூன்றும் மு.க.ஸ்டாலினிடம் உண்டு. ஸ்டாலின் திமுகவை வழிநடத்துவார் என்று நாடு நம்புகிறது. நானும் வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.


Add new comment

Or log in with...