கைப்பேசி பேசியபடி வாகனம் செலுத்திய 64,105 சாரதிகளின் அனுமதி பத்திரம் ரத்து | தினகரன்

கைப்பேசி பேசியபடி வாகனம் செலுத்திய 64,105 சாரதிகளின் அனுமதி பத்திரம் ரத்து

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் கையடக்கத்தொலைபேசி பேசியபடி வாகனம் செலுத்திய 64,105 பேரின் சாரதி அனுமதி பத்திரங்கள் மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மொத்த விதிமீறல் குற்றங்களில் 40 சதவீதம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விபத்துகளுக்கு அதிகம் காரணமாகும் முக்கிய விதி மீறல்களை வரையறுத்தபோது அதில் முக்கிய இடங்களைப் பிடிப்பது மதுபோதையில் வாகனத்தை இயக்குவது, கையடக்கத்தொலைபேசி பேசியபடி வாகனத்தை இயக்குவது, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவது, அஜாக்கிரதையாக இயக்குவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றுவது போன்றவை ஆகும்.

இந்தக் குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு பொலிஸாரிடம் சிக்குபவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப் பரிந்துரைக்கலாம் என்று திருத்தப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் வாகன சாரதிகள் போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். இதிலும் முன்பெல்லாம் மதுபோதையில் வாகன சாரதிகளை பொலிஸார் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பின்னர் நிரூபிக்கும் நிலை இருந்தது.

அதிலும் ஒரு மாற்றமாக இலகுவாக ஊதினாலே மதுவின் அளவைக் காட்டும் கருவி போக்குவரத்து துறையில் கொண்டுவரப்பட்டது. இதில் ஊதியவர்கள் மது அருந்தியிருந்தால் தப்பிக்க முடியாது. அவர்களின் அனைத்து தகவல்களும் உடனடியாகப் பதிவாகிவிடும்.

இதன்மூலம் மதுபோதையில் வாகனம் செலுத்திவரும் விஐபிக்கள்கூட தப்பிக்க முடியாமல் சிக்கினர். இந்நிலையில் இந்தப் புதிய கருவிகளின் வருகையால் பலரும் சிக்கினர். அவர்களது சாரதி அனுமதி பத்திரம் ஆறு மாத காலத்துக்கு ரத்தும் செய்யப்பட்டது. இதேபோன்று வேகத்தை அளக்கும் கருவியும் வந்துவிட்டது. இதுபோன்ற நவீன விஞ்ஞான வரவுகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் பலரும் சிக்கி வருகின்றனர். தற்போது 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு சிக்கியவர்களின் சாரதி அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

இந்த விதிமீறல்களின் எண்ணிக்கையை போக்குவரத்துத் துறை வெளியிட்டது. அந்த எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. போக்குவரத்து விதிமீறலினால் கடந்த 7 மாதங்களில் 1 இலட்சத்து 57 ஆயிரத்து 706 வாகன சாரதிகளின், சாரதி அனுமதி பத்திரம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக முதலிடத்தில் இருப்பது கையடக்கத்தொலைபேசி பேசியபடி வாகனத்தை செலுத்திய சிக்கியவர்களே ஆவர். கையடக்கத்தொலைபேசி பேசியபடி வாகனம் செலுத்தி சிக்கியவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 105 ஆகும். அடுத்த இடத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்ததாக 29 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 19 ஆயிரத்து 422 பேர்.

சிக்னலை மதிக்காமல் சென்று சிக்கியவர்கள் 18 ஆயிரத்து 287 பேர்.

அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 17 ஆயிரத்து 701 பேர்.

அதிக எடையான பொருட்களை ஏற்றி சிக்கியவர்கள் 7 ஆயிரத்து 223 பேரும் அடங்குவர்.

மொத்தமாக 7 மாதங்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 702 பேர் ஆகும்.

 


Add new comment

Or log in with...