பிரபாகரன் கொல்லப்பட்டபோது நானும் பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை | தினகரன்

பிரபாகரன் கொல்லப்பட்டபோது நானும் பிரியங்காவும் மகிழ்ச்சி அடையவில்லை

ஜெர்மனியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

என் தந்தையைக் கொன்ற குற்றவாளி புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது நானும் எனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சி அடையவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசியுள்ளார்.

ஜெர்மன் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் உள்ள புயுசிரியஸ் பாடசாலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, என் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இரையாகிக் கொல்லப்பட்டார்கள். நான் வன்முறையால் பாதிக்கப்பட்டவன். நான் இங்குப் பேசும் பேச்சுக்கள் எல்லாம் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடுதான்.

வன்முறையை வெல்வதற்கு ஒரேவழி, அதைக் கடந்து வருவதற்கு ஒரேவழி மன்னிப்பு மட்டுமே. இதன் மூலம் தான் நாம் வன்முறையைக் கடந்து வர முடியும். வேறு வழியில்லை.

நீங்கள் ஒருவருக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் உண்மையில் என்ன நடந்தது?, ஏன் நடந்தது என்பதை அறிய முடியும்.

வன்முறையைப் பற்றி சிந்தித்து அதற்கு எதிர்வினையாற்றாமல் இருப்பதை மக்கள் பலவீனம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதுதான் பலம், வலிமை.

என்னுடைய தந்தை 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டார். ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு என் தந்தையின் சாவுக்குக் காரணமாக அந்த நபர் இலங்கையில் சுடப்பட்டு கிடப்பதைப் பார்த்தேன்.

இதுகுறித்து எனது சகோதரி பிரியங்காவை தொலைப்பேசியில் அழைத்தேன். என் மனது ஒருவிதமான பதற்றத்துடன் இருக்கிறது.

நம் தந்தை கொலை செய்ய காரணமாக இருந்தவர் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் இருந்தாலும் என் மனதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றேன்.

உண்மையில் என் தந்தையின் கொலைக்குக் காரணமானவர் கொல்லப்பட்டபோது, நான் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றேன்.

அதற்கு அவர், ஆம் சரியாகச் சொன்னாய் எனக்கும் மகிழ்ச்சி ஏற்படவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார். என் மனதில் மகிழ்ச்சி ஏற்படாததற்குக் காரணம் என்னவென்றால் நான் புலிகள் பிரபாகரனின் குழந்தைகள் இருக்கும் இடத்தில் என்னை வைத்துப் பார்த்தேன்.

சுடப்பட்டு தரையில் விழுந்துகிடக்கும்போது என் தந்தையை நான் இழந்து கதறி, கண்ணீர் விட்டது போன்றுதான் அந்தக் குழந்தைகளையும் கதறும் என்று உணர்ந்தேன்.

புலிகள் பிரபாகரன் கெட்டவராக இருந்திருக்கலாம் அல்லது கொடூரமானவராக இருந்திருக்கலாம். ஆனால் வன்முறை அவருக்கு எதிராகப் பாய்ந்து, அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதித்துவிட்டது. அந்த வன்முறையால் நானும் பாதிக்கப்பட்டேன்.

நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், வன்முறையை ஏதோ ஒரு காரணி தூண்டிவிட்டிருப்பதைக் காணலாம்.

இது ஏதோ சாதாரணமாக நடக்கும் செயல் அல்ல. ஒருவருக்கு எதிராக வன்முறை அல்லது ஒரு செயல் தூண்டிவிடப்பட்டுள்ளதாகவே எடுக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை வன்முறையை எதிர்த்து போரிட அஹிம்சையால் மட்டுமே முடியும். வேறு எந்த வழியும் இல்லை.

வன்முறைக்குள் இருந்து கொண்டு வன்முறையை எதிர்த்து வன்முறை ஆயுதத்தால் போரிடலாம் வெற்றிபெறலாம். ஆனால் மீண்டும் அந்த வன்முறை வளரக்கூடும்.மனதுக்குள் இருக்கும் நீங்காத கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறைக்குக் காரணம்.

நீங்கள் அதற்கான காரணத்தை புரிந்துகொண்டு, அந்த வன்முறையை, கோபத்தை வெளியேற்றாதவரை அது தொடர்ந்து உங்கள் மனதில்தான் இருக்கும். உங்களால் வன்முறையை விட்டு வெளியே வர முடியாது.

வன்முறையை எதிர்த்து அதிகமான வன்முறையால் போரிட்டுக்கொண்டே இருக்க முடியாது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கடந்த ஆண்டு 1984-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் திகதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தியை மனிதவெடிகுண்டு மூலம் புலிகள் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...