ஊடக விழுமியங்கள் மீறப்படுவது அழகல்ல! | தினகரன்

ஊடக விழுமியங்கள் மீறப்படுவது அழகல்ல!

இலங்கையில் ஊடக சுதந்திரம் ஆரோக்கியமான முறையில் இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மக்கள் நலன்களுக்காக ஊடக சுதந்திரத்தைக் கையாளக் கூடிய ஊடக கலாசாரத்தை காண முடியாதிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம கவலை வெளியிட்டிருக்கின்றார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற ஊடக கல்லூரி பட்டமளிப்பு வைபவத்தின் போதே அவர் இந்த விசனத்தை வெளிக்காட்டியுள்ளார். தீபிகாவின் இந்தக் கூற்று குறித்து மிக ஆழமாக சித்திக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

அண்மைக் காலமாக பொதுமக்களின் வெற்றியாக ஆரோக்கியமானதும் மிக முக்கியமானதுமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் சில ஊடகங்கள் அவற்றுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கத் தவறியிருப்பதை கலாநிதி தீபிகா உடகம சுட்டிக்காட்டி இந்த ஊடகங்களின் போக்கு பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தகவலறியும் உரிமைச் சட்டம், வடக்கில் படையினர் வசமிருந்த காணிகள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டமை, மக்களது உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் விதத்திலான உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவை இங்கு அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சில ஊடகங்களின் பிழையான அணுகுமுறை காரணமாக ஒட்டுமொத்த ஊடகத் துறைக்கே அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதை இதன் மூலம் காணக்கூடியதாக உள்ளது. எமது நாட்டில் ஊடகங்கள் அதுவும் சில தனியார் ஊடகங்கள் தமக்கென தனியான நிகழ்ச்சி நிரலை வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதி, நியாயம், தர்மம் என்பனவற்றை இந்த ஊடகங்கள் மறந்து செயற்படுவதை வெளிப்படையாகவே அவதானிக்க முடிவதை காண முடிகின்றது.

எந்தவொரு ஊடகவியலாளரும் மக்களுக்குப் பொறுப்புக் கூறுபவர்களாகவே உள்ளனர். இந்த பொறுப்புக் கூறல் கடப்பாட்டிலிருந்து அவர்கள் எந்த விதத்திலும் விலகிச் செயற்பட முடியாது. ஊடக சுதந்திரமென்பது ஜனநாயக சமூகக் கட்டமைப்பில் மிக முக்கியமான காரணியாகும் என்பதை மறந்து விடக் கூடாது. இதனடிப்படையில் பார்க்கின்ற போது இன்று இலங்கையில் ஊடக சுதந்திரம் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்படுவதாக உள்ளது என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ள முடிவதாகவும் சாதகமான சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.

அண்மித்த காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு இடத்திலும் ஊடகவியலாளர்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல் அல்லது கொலை செய்யப்படல் போன்ற எந்தச் சம்பவமும் இடம்பெற்றதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை. இது நாட்டின் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டியுள்ளது. நல்லாட்சியில் உருவான இந்த ஆக்கபூர்மான மாற்றங்களை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஊடகம் என்பது மனித உரிமைகளில் ஒரு பிரதான அங்கமாகவே நோக்க முடிகிறது. ஊடகங்கள் அவற்றுக்குரிய கடமைப்பாட்டை உணர்ந்து செயற்படத் தவறினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் அவலநிலையை கொண்டு வரலாம்.

நாட்டு மக்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனர். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறுவோமானால் அந்த மக்கள் ஊடகங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் நிலை ஏற்பட்டு விடலாம். எனவேதான் ஊடகங்கள் என்றும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. உண்மையைச் சொல்வதில் ஊடகங்கள் அச்சம் கொள்ளக் கூடாது. அதேசமயம் ஊடகங்களுக்கு பக்கச் சார்பு இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளின் பக்கம் நின்று பேசுவதைவிட மக்கள் பக்கம் நின்று பேசுவதே நேர்மையான ஊடக தர்மமாகும்.

இன்று எமது நாட்டில் காணப்படுகின்ற செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பக்கம் சார்ந்தவையாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. நடுநிலை என்ற கோஷம் மட்டுமே அவற்றில் காணப்படுகின்றன. நடுநிலை என்பது அவர்கள் பாஷையில் எதைச் சுட்டுகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில் ஊடக தர்மத்துக்குரிய அடையாளத்தையே காண முடியவில்லை.

பாரபட்சமற்ற, சரியான தகவல்களையே மக்கள் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். மக்களின் அந்த எதிர்பார்ப்பு 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கிடைக்கின்றது. சில ஊடகங்களில் வரும் செய்திகள், தகவல்களை பார்க்கின்ற போது அந்த ஊடகங்கள் கட்சி அரசியலுக்கு விலை போய் இருப்பதையே காண முடிகிறது. அதேசமயம் சில ஊடகங்கள் இனவாதத் தீயை கக்கிக் கொண்டிருக்கின்றன. ஊடக நெறிமுறையை பேணும் ஊடகங்களை விரல் விட்டே எண்ணி பார்க்க முடிகிறது.

மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவரது கூற்றைக் கவனத்திலெடுத்து ஊடக தர்மத்தைப் பேணுவதில் அனைத்து ஊடகங்களும் தத்தமது மனநிலையை மாற்றிக் கொள்வது அவசியமானதாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் ஆரோக்கியமான திட்டங்களுக்கு கைகொடுப்பதோடு அவற்றை மக்கள் மயப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்ய வேண்டும். எழுதுகோல் எனும் ஆயுதம் கையிலிருப்பதற்காக கண்டபடி விமர்சிக்கும் விதத்தில் செயற்படுவது ஊடக தர்மமாகி விடாது.

கிடைத்திருக்கும் ஊடக சுதந்திரத்தை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். நல்லதைச் சொல்லவும் தவறானவற்றைச் சுட்டிக்காட்டவும் ஊடகங்கள் முன்வர வேண்டும். நல்லதை மூடிமறைத்து தவறை மட்டும் வெளிப்படுத்துவது ஊடக தர்மமாகாது என்பதை ஒவ்வொரு ஊடகவியலாளரும், ஊடக நிறுவனங்களும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும்.


Add new comment

Or log in with...