இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு தமிழர் கண்ணீரை துடையுங்கள் | தினகரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு தமிழர் கண்ணீரை துடையுங்கள்

மயிலிட்டியில் ஜனாதிபதியிடம் மாவை வேண்டுகோள்

இந்த வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மயிலிட்டி பிரதேச காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கேட்டுக் கொண்டார். வடக்கு மக்கள் கண்ணீரோடு வாழ்வதாகவும் மீள யுத்தம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்க இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம் என குறிப்பிட்ட அவர் “ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்” எனவும் தெரிவித்தார்.

மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக் கிணங்க அப்பகுதி பாடசாலைகள் இரு வார காலத்தில் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மயிலிட்டி துறைமுக புனர்நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலேயே கடந்த ஆட்சியை இல்லாதொழித்து தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கினர். எனினும் அவரது வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை. வடக்கின் காணிகள் 6 மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த போதும் மேலும் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டி துறைமுகம் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்ற போது அதனை அண்டிய பிரதேச மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை.

இதனால் அபிவிருத்தி பிரயோசனமற்று போய்விடும்.

எமது மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஜனாதிபதி திகழ்கிறார். அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டும். பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு பற்றி பேசப்படுகின்ற போதும் அது மந்தமாகவே உள்ளது.

ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அனைத்துக் கட்சிகளும் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரிசயலமைப்பு மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கத் தயார். (ஸ)

யாழ்ப்பாணத்திலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா


Add new comment

Or log in with...