வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு | தினகரன்

வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

தமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்படும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்திகதி காலமானார்.

அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஸ்தி அடங்கிய கலசத்தினை கட்சியின் மாநில தலைவர்களிடம் வழங்கினர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது.

அஸ்தியை பெற்று கொண்ட பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கமலாலயத்தில் இன்று அஸ்தி வைக்கப்படும். அதன்பின்னர் பௌர்ணமி அன்று அஸ்தி கரைக்கப்படும் என கூறினார். இதேபோன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது. மறைந்த பிரதமர் வாஜ்பாய் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பினை பெற்றவர். அவருக்கு அனைத்து மக்களாலும் மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. வாஜ்பாய் அஸ்தியை கரைப்பது ஆன்மிக கடமை ஆகும் என கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...