பிரதமர் மோடி--சீனப் பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திப்பு | தினகரன்

பிரதமர் மோடி--சீனப் பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திப்பு

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கி 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெய் பெங்கி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். சர்வதேச அளவிலான ஸ்திரதன்மைக்கு இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு முக்கிய காரணியாக விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் அமைதியான சூழலை நிலவச் செய்ய வேண்டும் என்றார்.

சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கை சீனாவின் வூஹான் கிங்டாவ் ஆகிய நகரங்களிலும் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...