கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் | தினகரன்

கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்

நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நேற்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த இளைஞரைப் பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பெப்ரவரி முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். கட்சிக்கு மாநில நிர்வாகிகளை அறிவித்த கமல், வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் முன்னர் தான் வசித்த ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டை தனது கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார். தனது வீட்டை ஈசிஆர் வீதிக்கு மாற்றிவிட்டார். கட்சி அலுவலகமாக மாற்றினாலும் ஆழ்வார்பேட்டை அலுவலகக் கதவுகள் மூடி பாதுகாப்பு காவலாளிகள் எந்நேரமும் இருப்பார்கள்.

இந்நிலையில் நேற்று அதிகாலை எல்டாம்ஸ் வீதியில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறிக் குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் அவரைப் பிடித்தனர். முரட்டுத்தனமாக திமிறிய அவரை தேனாம்பேட்டை பொலிஸில் ஒப்படைத்தனர்.

பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மலைச்சாமி (34) என்பதும் புரசைவாக்கம் ராஜா அண்ணாமலைபுரம் தெருவில் வசிப்பதும் தெரியவந்தது. பொலிஸாரிடம் நான் எதற்குப் பதில் சொல்ல வேண்டும், கமல் வீட்டுக்குப் போனேன் சுவர் ஏறிக் குதித்தேன் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்துள்ளார்.

இதற்கிடையே அவரது குடும்பத்தார் தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தனர். மலைச்சாமியைப் பார்த்து அழுத பெற்றோர் ஆய்வாளரிடம் மலைச்சாமி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவ அறிக்கைகளைக் கொடுத்துள்ளனர்.

மலைச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ள மருத்துவ அறிக்கை அது. அதன் பின்னர் ஆய்வாளர் அந்த இளைஞரை அழைத்துக் கேட்டபோது அதே முரட்டுத்தனத்துடன், ''ஆமாம் கமல் வீட்டுக்குப் போனேன், சுவர் ஏறிக் குதித்தேன்'' என்று கூற ஆய்வாளர் ''அது தப்பு அல்லவா'' என்று கேட்க, ''ஆமாம் தப்புதான்'' என்று மலைச்சாமி கூறியுள்ளார்.

மலைச்சாமியின் நிலையை உணர்ந்து அவரது குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று வழக்கு எதுவும் தாக்கல் செய்யாமல் மனிதாபிமானத்துடன் ஆய்வாளர் அனுப்பி வைத்தார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் என்று எச்சரித்தார்.

இதற்கு முன்னரும் ஜூன் மாதம் சபரிநாதன் என்ற இளைஞர் ஒருவர் கமல் வீட்டுக்குள் நுழைய முயன்று பிடிபட்டார். கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் கமலின் ரசிகர். திருவல்லிக்கேணியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்த அவரும் இதே போன்று நுழைய பொலிஸார் பிடித்து பின்னர் எச்சரித்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.


There is 1 Comment

பொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.

Add new comment

Or log in with...