சகிப்புத்தன்மை, சகவாழ்வுக்கு வழிகாட்டும் தியாகப் பெருநாள் | தினகரன்

சகிப்புத்தன்மை, சகவாழ்வுக்கு வழிகாட்டும் தியாகப் பெருநாள்

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் ஈகைத் திருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ஹஜ் கடமை இஸ்லாமிய நாட்காட்டியின் துல்ஹிஜ்ஜா மாதத்தில் சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள கஃபா மற்றும் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் நிறைவேற்றப்படுவதைத் தொடர்ந்து இப்பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதிகாலையில் நீராடி, புத்தாடைகள் அணிந்து, இறைவழிபாடுகளில் ஈடுபடுவதோடு இப்பெருநாள் ஆரம்பமாகின்றது.

சகோதரத்துவ வாஞ்சையும், ஒற்றுமையும், சகவாழ்வும் தழைத்தோங்க இப்பெருநாள் பெரிதும் வழிவகுக்கின்றது. பெருநாள் தொழுகை நிறைவடைந்ததோடு உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதும் பெருநாள் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்வதும் இதற்கு பக்கத்துணையாக அமைகின்றது.

இவ்வாறு சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கும் பெருநாளையே முஸ்லிம்கள் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கென இரண்டு பெருநாட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹஜ் பெருநாள், மற்றையது ஒரு மாத காலம் நோன்பிருந்து அதன் நிறைவில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள். இரண்டு பெருநாட்களுமே மகிழ்ச்சிக்குரிய நாட்களாக இருக்கின்ற அதேநேரம், படிப்பினைகளையும் முன்மாதிரிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பொருளாதார வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு தடவை உலகில் இறைவனை வணங்கி வழிபடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மஸ்ஜிதான கஃபாவில் கூடி இக்கடமையை நிறைவேற்ற வேண்டும். அந்தக் கட்டளைக்கு ஏற்ப உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் வருடா வருடம் இலட்சக்கணக்கில் கஃபாவில் கூடி இக்கடமையை நிறைவேற்றுகின்றனர். இனம், மொழி, நிறம், நாடு வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரே நிற மற்றும் ஒரே வித ஆடையில் ஒன்றுகூடி இக்கடமையை நிறைவேற்றுவதானது சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச மாநாடாகவே விளங்குகின்றது.

அதாவது இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறைபணியில் ஈடுபட்ட இப்றாஹீம் (அலை) அவர்கள் விடுத்த அழைப்பு இறைவனின் அங்கீகாரத்தின் ஊடாக ஹஜ் கடமையாக்கப்பட்டு யுக முடிவு வரையும் உலக முஸ்லிம்கள் ஒன்று சேரும் புனித தலமாக கஃபா திகழ்கின்றது.

இந்த அழைப்பின் சொந்தக்காரராக விளங்கும் இப்றாஹீம் (அலை) அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் தியாகம், அர்ப்பணிப்பு, சகிப்புத்தன்மை என்பவற்றை இக்கடமையும், பெருநாளும் பின்புலமாகக் கொண்டுள்ளது.

இவர்களது தியாகம், சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு என்பன மிகவும் தெளிவான முறையில் காணப்படுகின்றன. அவை உலகம் இருக்கும் வரையும் படிப்பினை மிக்கவையாகவும் முன்மாதிரி மிக்கவையாகவும் உள்ளன. அவற்றை சரியான முறையில் அணுகும் போது வாழ்வுக்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இருந்தும் இவை உரிய ஒழுங்கில் அணுகப்படாததன் விளைவாகவே முரண்பாடுகளும், சண்டை, சச்சரவுகளும் இரத்தம் சிந்துதல்களும் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு பொறாமை, ஆணவம், சகிப்புத்தன்மை இன்மை என்பனவே காரணங்களாகும்.

ஆனால் விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு இருந்தால் உலகில் காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை தானாகவே நீங்கி விடும் என்பதுதான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். ஆனால் இந்த நிலைமையை ஏற்படுத்து-வதற்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு.

அந்த வகையில் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் கூட இவைதான்அடிநாதமாக விளங்குகின்றன. அந்த பிரச்சினைகளுக்கும் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு என்பன நல்ல தீர்வாக அமையும்.

அதேநேரம் இந்நாட்டு முஸ்லிம்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் அச்சம் பீதியுடனேயே பெருநாட்களைக் கொண்டாடினர். தம் சமய கிரியைகளைக் கூட நிறைவேற்றத் தயங்கிய காலம் அது. அந்த இருண்ட யுகத்தை நீக்கி அச்சம் பீதியின்றி பெருநாட்களைக் கொண்டாடக் கூடிய சூழலை இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதன் பயனாக 2015 ஆம் ஆண்டின் பின்னர் அச்சம் பீதியின்றி நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இலங்கையில் தம் பெருநாட்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் பெற்றுத் தந்திருக்கும் நிம்மதியான சுதந்திர சூழலை உரிய முறையில் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவியது போன்ற ஒரு இருண்ட சூழல் மீண்டும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.

ஆகவே பல்லின மக்கள் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இதர மக்களுடன் சகவாழ்வு, புரிந்துணர்வுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழ்வதில் அதிக சிரத்தை காட்ட வேண்டும். அதற்கு சிறந்த சந்தர்ப்பமாக இந்நன்னாளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு எல்லா முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களும் ஐயங்களும் தெளிவின்மைகளுமே அடிப்படைக் காரணங்களாக விளங்குகின்றன. அவற்றைக் களைவதற்கான அடித்தளத்தை இடுவதற்கான நன்னாளாகக் கூட இத்தினத்தை அமைத்து-க் கொள்ளலாம். எல்லா சமயங்களும் மனித நேயத்தையும் சகவாழ்வு ஒற்றுமையையுமே போதிக்கின்றன. அதனால் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுவது காலத்திற்கேற்ற பணியாகவும் பயன்மிக்க செய்பாடாகவும் இருக்கும். இன்று தியாகத் திருநாளைக் கொண்டும் முஸ்லிம்களுக்கு தினகரனின் வாழ்த்துக்கள்.


Add new comment

Or log in with...