நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி | தினகரன்

நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன்மூலம் இத்திறன் படைத்த நாடுகளில் 6வதாக இந்தியா இணைந்துள்ளது.

கடந்த 11 மற்றும் 12ம் திகதிகளில் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளது. கடலுக்கடியில் 20 மீட்டர் ஆழத்திலிருந்து இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது. இருமுறையும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.

10 தொன் எடை கொண்ட இந்த ஏவுகணை 750 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியாக தாக்கும் திறன் படைத்தது. இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பது மிகவும் கடினம்.

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் 20 ஆண்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

இந்த சோதனையை இந்தியா மிகவும் இரகசியமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜஸ்தானின் சந்தன் இராணுவ தளத்தில் போர் விமானத்திலிருந்து அதிநவீன வெடிகுண்டு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது.

பொக்ரான் இராணுவ தளத்தில் பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணையான 'ஹெலினா' வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இவ்விரு சோதனைகளும் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...