சொந்த வீடு, கார் இல்லாது இருந்தவர் கருணாநிதி | தினகரன்

சொந்த வீடு, கார் இல்லாது இருந்தவர் கருணாநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் வீடு, கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனக்கு 13 கோடியே 43 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் திகதி காலமானார். 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்த அவர், 60 ஆண்டுகள் எம்எல்ஏ, 50 ஆண்டுகள் திமுக தலைவர், 19 ஆண்டுகள் முதல்வர் என சாதனை படைத்துள்ளார். ஆனாலும் அவரது பெயரில் வீடு, கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டை தனது மனைவி தயாளு அம்மாளுக்கும் பிறகு மருத்துவமனை அமைக்கவும் வழங்கிவிட்டார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி, கருணாநிதிக்கு 13 கோடியே 43 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் வங்கியில் செய்யப்பட்ட வைப்புத் தொகையே அதிகம். இந்த வைப்புத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் ரூ.7.52 கோடிக்கும், ராசாத்தி அம்மாள் பெயரில் ரூ.42 கோடிக்கும் சொத்துகள் இருப்பதாகவும் கருணாநிதி கடந்த 2016-ல் சொத்து விவரங்கள் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...