அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம்! | தினகரன்

அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம்!

முப்பது வருட காலமாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதனால் நாட்டின் தேசியப் பிரச்சினையும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அன்றைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

யுத்தம் முடிவடைந்த வேளையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த அவர், தாய்நாட்டின் மண்ணை முத்தமிட்ட பின்னர் அன்று கூறிய வார்த்தை இன்றும் நினைவிருக்கின்றது.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரமன்றி தமிழ் இனத்துக்கும் அன்று அவர் கூறிய வார்த்தை உண்மையிலேயே நகைப்புக்கிடமானது.

மஹிந்தவின் அன்றைய கூற்று உண்மையிலேயே சரியானதாக இருந்திருக்குமானால், யுத்தம் முடிவுற்று ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையிலும் எமது நாடு தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத நிலையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை; சர்வதேசத்தின் முன்பாக இலங்கை இன்னுமே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்க வேண்டியதுமில்லை.

தமிழினத்தின் மத்தியிலிருந்து இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடியது அவசியமற்றதொரு காரணத்துக்காகவென்றும், அந்த யுத்தத்துக்கு முடிவு கண்டு விட்டால் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கே முடிவு எட்டப்பட்டு விடும் என்பதுவுமே பெரும்பான்மை இனத்தில் அநேகமான அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களுக்கு அன்று ஊட்டி வந்த கருத்து ஆகும்.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதற்கு விதிவிலக்கு அல்ல... தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான முடிவைக் கண்டுவிட்ட ஒரேயொரு தலைவனாக தன்னையே குறிப்பிட்டு பெருமிதப்பட்டுக் கொள்கிறார் மஹிந்த.

அன்றைய ஆட்சியாளர்கள் மாத்திரமன்றி இன்றைய ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளில் பலரும் இதேவிதமான கருத்தையே பிரதிபலித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

ராஜபக்ஷக்களின் கொடுங்கோன்மை நிறைந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நல்லாட்சி மலரச் செய்யப்பட்டு விட்டதனால் தேசியப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விட்டதாக அரசாங்கத்திலுள்ள பலரும் கருத்து வெளியிடுவதைக் காண முடிகின்றது.

நாட்டில் அமைதி நிலவுகின்றது; எந்தவொரு பிரஜையுமே நாட்டின் எப்பகுதிக்கும் அச்சமின்றிச் சென்று வரக் கூடிய சுமுகமான சூழல் நிலவுகின்றது; முக்கியமாக தமிழ் மக்களின் அச்சம் நீக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை விடயங்களும் சுமுகமாக இருக்கையில், தமிழ் மக்களுக்கு வேறென்ன அவசியமாகின்றது என்பதுதான் இவர்கள் முன்வைக்கின்ற வினா!

தமிழினம் அரைநூற்றாண்டுக்கு மேலாக அரசியல் உரிமை கோரி போராடியதெல்லாம் அவசியமற்றதென்ற தோரணையிலேயே ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் வட மாகாண சபையின் அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமிழினத்துக்கு அரசியல் அதிகாரங்களை வழங்கக் கூடிய தீர்வொன்றைக் காண்பதற்காகவும், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பாகவும், தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதிகளெல்லாம் இனவாதிகளாக இவர்களுக்குத் தென்படுகின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு இன சமத்துவமின்மையினால் இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுகின்ற வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் அவர்கள் இனவாதியாகப் பார்க்கிறார்கள்.

அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது எதிரணி தரப்பிலிருந்தோ வடபகுதிக்குச் செல்கின்ற பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உண்மையிலேயே சர்ச்சைக்குரிய மனிதராகத்தான் தென்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

பெரும்பான்மையின அரசியல்வாதிகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வது அவசியம். விக்னேஸ்வரன் ஒருபோதுமே தனிநாடு கோரவில்லை. சிங்கள மக்களுக்கு நிகரான விதத்தில் தமிழ் மக்களும் கௌரவமாக வாழும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் வழங்கப்பட வேண்டுமென்று, இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எழுப்பப்படும் கோரிக்ைககக்கு செவிசாய்க்குமாறுதான் அவர் குரலெழுப்புகிறார்.

இன்றைய எதிர்க் கட்சித் தலைவரான இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்ற அரசியல் உரிமைக் கோரிக்கைகளையே விக்னேஸ்வரனும் முன்வைக்கின்றார்.

அரசாங்கத்துடன் நல்லிணக்கப் போக்கைக் கடைப்பிடிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், வடக்கில் முதலமைச்சராக இருக்கின்ற விக்னேஸ்வரனும் இக்கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்ற தோரணை வேறாக இருக்கக் கூடும். எனினும் இரு தரப்புக் கோரிக்கையும் ஒன்றுதான்.

வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்றது. வட மாகாண சபைக்குள் முரண்பாடுகளும் சிக்கல்களும் ஆரம்பம் முதல் இன்று வரை தொடர்ந்தபடியே இருக்கின்றன. தமிழினத்தின் மத்தியில் ஒருபோதுமே அரசியல் ஒற்றுமை நிலவியதில்லை என்பதற்கான அடையாளமாகவே வட மாகாண சபைக்குள் தொடருகின்ற முரண்பாடுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்விடயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவ்வப்போது கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றார் என்பதனை மறுக்க முடியாது.

ஆனாலும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களால் விக்னேஸ்வரன் இன்னுமே விருப்புக்குரிய ஒருவராகவே நோக்கப்படுகின்றாரென்ற யதார்த்தத்தை எவருமே புறந்தள்ளி விட முடியாதிருக்கின்றது. விக்னேஸ்வரன் மீதான தனிப்பட்ட ஈர்ப்பு இதற்குக் காரணமல்ல. தமிழினத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக உரத்துக் குரல் எழுப்பி வருவதாலேயே விக்னேஸ்வரன் இன்னுமே வசீகரம் மிக்கவராகத் தென்படுகிறார்.

அதேசமயம் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரால் அவர் இன்னுமே இனவாதியாகவும், முரண்பாடு கொண்டவராகவும் விமர்சிக்கப்படுகின்றார்.

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் நடைபெறும் வேளையில் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத விவகாரங்களே முக்கியத்துவம் பெறப் போகின்றன. அமைச்சுப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பதற்காகவோ அல்லது இனத்துக்கான அற்ப சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவோ வடபகுதி தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்கப் போவதில்லை. அம்மக்களின் உரிமைக் கோரிக்கைகளும் பிரச்சினைகளும் அரை நூற்றாண்டைக் கடந்தவையாகும்.

தமிழினத்துக்கு உண்மையிலேயே அரசியல் ரீதியான பிரச்சினைகள் உண்டென்பதை பெரும்பான்மை சமூகம் முதலில் புரிந்து கொண்டாலன்றி நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் வெறும் போலிவார்த்தைகளாகவே இருந்து விடும்.


Add new comment

Or log in with...