கேரள வெள்ளம்; பலியானோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு | தினகரன்


கேரள வெள்ளம்; பலியானோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு

கேரளாவில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த கடும் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் உட்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

இதுவரை 97 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்துள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97ல் இருந்து 324 ஆக அதிகரித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளன. இந்த மீட்புக்குழுவில் கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப் பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளன.

 


Add new comment

Or log in with...