வாஜ்பாயின் பூதவுடல் அக்கினியில் சங்கமம் | தினகரன்


வாஜ்பாயின் பூதவுடல் அக்கினியில் சங்கமம்

இராணுவ மரியாதை, வேதமந்திரம் முழங்க இந்திய முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை அக்கினியில் சங்கமமானது.

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடல், வேதமந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்படும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். வாஜ்பாயின் உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டன. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகள் நடந்த போது அவ்விடம் வாஜ்பாயின் தோற்றம் போலவே அமைதியாகக் காணப்பட்டது. அங்கு ஒரு ஆழ்ந்த சோகம் காணப்பட்டதை உணர முடிந்தது.

இறுதிச் சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல்லில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

முப்படை தளபதிகள் இறுதி மரியாதையுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இறுதி மரியாதை செலுத்தினார். பிறகு பிரதமர் நரேந்திர மோடி தங்கள் கட்சியின் மூத்தத் தலைவருக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

வாஜ்பாயியின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக புது தில்லியில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தல் வந்தடைந்தது.

இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாயின் உடலுக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் மக்கள் வெள்ளம் போல காட்சியளித்தது.

பா.ஜ.க தலைமையகத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயியின் உடல் இறுதிச் சடங்கு நடைபெறும் மேடையில் வைக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் வாஜ்பாயின் பேழை வைக்கப்பட்டிருக்கும் ஊர்தியுடன் நடந்தே வந்தனர். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாயின் உடலுடன் நடந்தே வந்த பிரதமர் நரேந்திர மோடி, இராணுவ வாகனத்திலிருந்து வாஜ்பாயியின் உடல் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதார்.

பூட்டான் மன்னர் மற்றும் நேபாளம், வங்கதேசம், இலங்கை அமைச்சர்களும், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும் வாஜ்பாயியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

தேசியக் கொடி பேத்தியிடம் ஒப்படைப்பு

இறுதிச் சடங்குகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை எடுத்த முப்படை வீரர்கள், அதனை அவரது பேத்தியிடம் ஒப்படைத்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாயியின் வளர்ப்பு மகளான நமிதா கௌல் பட்டாச்சாரியாவின் மகள் நிஹாரிகாவிடம் தேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...