பகிடிவதையால் 14 பேர் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989 | தினகரன்

பகிடிவதையால் 14 பேர் மரணம்; கல்வியை கைவிட்டோர் 1989

பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பகிடிவதை காரணமாக இதுவரை சுமார் 14 மாணவர்கள் மரணமாகியுள்ளதுடன் சுமார் 1989 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சு நடத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

2015/ 2016 கல்வியாண்டில் 1352 மாணவர்களும் 2016/ 2017 கல்வியாண்டில் 637 மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்த பின்னர் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டுச் சென்றுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 1998 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க பகிடிவதைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதுடன் பகிடிவதைகளை தவிர்ப்பதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

கலாசார அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் மிகப்பெரிய பாதாள உலகம் இருப்பது பல்கலைக்கழகத்தினுள் மட்டும்தான். பகிடிவதை காரணமாக 91,600 பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மனோரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு பாலியல்,உடல் ரீதியான வதை செய்யப்படுகிறது. இந்த நிலைமையை சரியான முறையில் புரிந்துகொண்ட முன்னாள் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி ரிச்சர்ட் பத்திரண 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க பகிடிவதைச் சட்டத்தை நிறைவேற்றித் தந்துள்ளார். இந்த சட்டம் சில காலம் முடங்கிக் கிடந்தது. எனினும், இந்தச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் அதனூடாக கடும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவும் விசேடமாக ஆகக்குறைந்தது 10 வருட சிறைத் தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் கூடிய விதத்தில் இதனை நடைமுறைப்படுத்துவோம்.பகிடிவதை செய்பவர்கள் தனியான (Safe House) வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அதனுள் வைத்து பகிடிவதையை செய்கின்றனர். நாவல, தெஹிவளை பகுதிகளில் இவர்கள் வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் பகிடிவதைக்கு எதிராக செயற்படுபவர்களை மிகக் கொடூரமாகத் தாக்குகின்றனர். பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை 14 மாணவர்கள் பகிடிவதை காரணமாக உயிரிழந்துள்ளனர். எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 91,600 மாணவர்கள் இருக்கிறார்கள். அரசுக்குச் சொந்தமான 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 14 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து 1989 மாணவர்கள் பகிடிவதை காரணமாக கல்வியை விட்டுச் சென்றுள்ளனர்.

நாடு என்ற வகையில் எங்களது உயர்கல்வியை தரமானதாக பாதுகாப்பதற்கென வொஷிங்டன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிறோம். பல்கலைக்கழக கல்வியில் தரம் காணப்படாவிட்டால் எமது பட்டதாரிகளை உலக நாடுகள் ஏற்காது போய்விடும். இதன் காரணமாக அவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வியைத் தொடர முடியாது போய்விடும். இந்த விடயம் முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் மாணவர்களை போராட்டங்களுக்குள் உள்ளீர்த்து விடுகிறார்கள். போராட்டங்களுக்கு தலைமையேற்றுச் செல்லும் மாணவர்கள் மிகச் சொகுசு ஜீப் வண்டிகளிலேயே பயணிக்கிறார்கள். அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை நன்றாகப் பயன்படுத்தி உண்டியல் குலுக்கச் செய்கிறார்கள். இதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு மாலையானதும் மது அருந்துகிறார்கள். தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். உண்டியல் குலுக்கி இவர்கள் சேர்த்த பணத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இவர்களால் சொல்லமுடியாது. நான் இவர்களிடம் சவால் விடுகிறேன். பணத்துக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் சொல்லட்டும். எனவே நான் நாட்டு மக்களிடம் அன்பாக வேண்டிக்கொள்வது உண்டியல் குலுக்கிக்கொண்டு வருபவர்களுக்கு ஒருசத மேனும் போடவேண்டாம். எமது நாட்டில் திருட்டு ஏமாற்றுக்காரர்களை முற்போக்காளர்கள் என்றே அழைக்கின்றோம்.

இவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விலாசங்களை கண்டுபிடித்துக்கொண்டு அவர்களின் குடும்ப பின்னணியை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்களது வீட்டுக்குச் சென்று நன்றாகப் பேசி அவர்களுடைய மனதை திசைதிருப்புகிறார்கள். தலைமைத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆனால், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பகிடிவதைகளில் ஈடுபடுவதில்லை. தமது முதலாம் ஆண்டு சகோதர, சகோதரிகளை ஏனையவர்கள் போலவே உதவி செய்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கிறார்கள். அவர்களை நன்றாகக் கவனிக்கிறார்கள்.

பகிடிவதைச் சட்டத்தை ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சில நாட்களுக்கு முன்பு பொலிஸ் மா அதிபர் சகல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களை அழைத்து பகிடிவதை தொடர்பாகவும் அதன் செயற்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார். பகிடிவதை செய்பவர்களுக்கு எதிராக எந்தவித நெகிழ்வுப் போக்கையும் கடைப்பிடிக்கக்கூடாதென்று தீர்மானித்தார்.

 


Add new comment

Or log in with...