வெளிமாவட்ட மீனவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றம் | தினகரன்

வெளிமாவட்ட மீனவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றம்

பரந்தன் குறூப்நிருபர்

முல்லைத்தீவு, நாயாறுப்பகுதியில் தங்கியிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று வெளியேறினர்.

கடந்த 13 ஆம் திகதி நாயாற்றில் தமிழ் மக்களின் எட்டு மீன் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இன முரண்பாடு ஏற்படாதவகையில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் இங்கு சென்று உண்மைநிலையை வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் (16 ) இப் பகுதியில் மீன் வாடி அமைத்து தொழில் செய்து வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் தலைமையிலான 50 க்கும் மேற்பட்டவர்களும் சுமார் 30க்கும் மேற்பட்ட படகுகளை வைத்து கடற்றொழில் செய்து வந்தவர்களும் (16) மாலை பொலிஸ் பாதுகாப்புடன் வாடிகளை விட்டு உடைமைகளுடன் வெளியேறினர்.

இதற்காக முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறாத வகையில் கடற்றொழிலாளிகளும் தங்கள் படகுகள் மற்றும் பொருட்களுடன் இப் பகுதியை விட்டு வெளியேறினர்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி இப்பகுதியிலுள்ள பிரதேச மீனவர் அலுவலகம் தாக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேறுமாறு பிரதேச மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இந் நிலையில் இப் பிரதேசத்துக்கு கடந்த 12 ஆம் திகதி விஜயம் செய்த அமைச்சர் அனுமதியின்றி கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மறுநாள் 13 ஆம் திகதி இரவு அங்குள்ள மீனவர்களின் வாடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந் நிலையிலேயே நேற்று முன்தினம் இம் மீனவர்கள் தங்களது உடைமைகளுடன் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

 


Add new comment

Or log in with...