வாஜ்பாய்க்கு பிரியாவிடை | தினகரன்

வாஜ்பாய்க்கு பிரியாவிடை

பா.ஜ.க கட்சியின் பிதாமகனும் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து 'நாடு முழுவதும் ஏழு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்' எனவும் மத்திய அரசு அறிவித்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி.கள், கனிமொழி, திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராரஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணா மேனன் பார்க் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்றுக் காலை வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்றுக் காலை 9-30 மணிக்கு வாஜ்பாய் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட இராணுவ ஊர்தியில் டெல்லி 'தீன்தயாள் உபாத்யாய் மார்க்' பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 9-30 மணிக்கு புறப்பட்ட ஊர்தி பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தது. அங்கு வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பாரதீய ஜனதா தலைவர்கள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும் பிற்பகல் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். பிரதமர் மோடி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன் 4 கிலோமீற்றர் தூரம் நடந்தே வந்துள்ளார்.

வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.


Add new comment

Or log in with...