எழுச்சி பெறும் கிராம ராஜ்ஜியங்கள் | தினகரன்

எழுச்சி பெறும் கிராம ராஜ்ஜியங்கள்

கிராம எழுச்சிக்காக எண்ணாயிரம் (8000) கோடி ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டுகளுக்கிடையில் முழு நாட்டையும் உள்வாங்கியதாக அனைத்துக் கிராமங்களையும் துரிதமாக அபிவிருத்தி செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகவே இந்த எட்டாயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நீண்ட காலக்கனவான கிராம ராஜ்ஜியங்களை உருவாக்கும் திட்டத்தை முன்னிலைபடுத்தியே இப்பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரலாற்றில் கிராமிய அபிவிருத்திக்காக மிகக் கூடுதலான நிதியை ஒதுக்கிக் கொடுத்திருப்பது இதுவே முதற்தடவையாகும். கிராமத்தை வளமடையச் செய்வதன் மூலமே நாட்டை செழிப்படையச் செய்ய முடியும். கிராமப்புறங்களில்தான். கூடுதலான வளங்கள் காணப்படுகின்றன. அந்த வளங்களை சரிவரப் பயன்படுத்துவதன் மூலமே நாட்டை துரித அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்ல முடியும். அதே சமயம் பொருளாதார ரீதியில் தேசத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். நாடு பொருளாதார முன்னேற்றம் காணாதவரை அந்நாட்டை மேம்பாடடையச் செய்ய முடியாது என்பது யதார்த்தமானதாகும்.

கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வழிகளில் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பெரலிய, எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழான கிராம சக்தித் திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் கிராமிய எழுச்சியை துரிதப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெரும் திட்டத்தை விரைவாக முன்னெடுக்கும் வகையிலேயே இந்தப் பாரிய அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை சீராகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கடப்பாட்டை கிராமிய மக்கள் கொண்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

அரசாங்கம் என்னதான் திட்டங்கள் வகுத்தாலும், நிதியொதுக்கினாலும் கிராமிய மக்களின் முழுமையான பங்களிப்பின்றி எந்தவொரு கிராமமும் முன்னேற்றமடையவோ, அபிவிருத்தியடையவோ முடியாது. அவர்களது சுயமான ஒத்துழைப்பும், ஈடுபாடும் மிக முக்கியமானதாகும். திட்டங்களை வகுப்பது இலகுவான காரியம்.ஆனால் அதனைச் செயற்படுத்துவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவற்றில் எத்தனை திடடங்கள் சாதிக்கக் கூடியதாக அமைந்தன என்பதை நாம் மீள்பரிசீலிக்க வேண்டிய தேவையுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். இது இலகுவானதொரு காரியமல்ல. ஆனால் தன்னால் முடியும் என்ற மன உறுதியுடனேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் படித்த வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இந்த வாக்குறுதி தேனாய் இனித்தது. அரச தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் அன்று பிரதமர் இதனைக் கூறவில்லை. புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே அவரது இலக்காகக் காணப்பட்டது. புதிய தொழில்களை உருவாக்கும் மகத்தான பணியை அவர் தனியார் துறையினரிடம் ஒப்படைத்தார். அதுவும் கிராமப்புறத்தை மையமாக வைத்து இதனை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியிருந்தார.

தேசிய வர்த்தகச் சந்தைக்கு அப்பால் சர்வதேச சந்தையையும் உள்வாங்கி இதனைச் செயற்படுத்த தனியார்த்துறைக்கு வாய்ப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தார். கிராமிய மட்டத்தில் படித்த இளைஞர் யுவதிகளை உள்ளீர்த்து உற்பத்திகளை அதிகரித்து சர்வதேச வர்த்தகச் சந்தைக்கு அனுப்புவதன் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்வதோடு கிராமத்திலெயே தொழில் வாய்ப்புகளையும் இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதான நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பறிக்கும் விதத்திலேயே பிரதமரின் இந்தத் திட்டம் அமையப்பெற்றிருந்தது.

இந்த முயற்சியில் அரசு கணிசமான தூரம் வெற்றி கண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மாகாண மட்டத்திலிருந்து மாவட்டத்தை நோக்கிச் சென்ற அபிவிருத்தித் திட்டங்கள் இன்று கிராமத்துக்குள் உள் நுழைந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏறபடுத்தும் வகையில் அரசின் திட்டம் வெளிப்படைத்தன்மை கொ்ணடதாகவே காணப்படுகின்றது. இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த தூரநோக்குடன் கூடிய நேர்மையான கொள்கை காரணமாக தடையின்றி பயணிக்க முடிந்துள்ளதை காண முடிகிறது. அதே போன்று அரசின் நேர்மையான வெளிநாட்டுக் கொள்கை தாராளமாக சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்கள் காரணமாக முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இந்த முதலீடுகள் நாடு தழுவிய மட்டத்தில் கிராமப் புறங்களில் முதலீடு செய்யப்படுவதன் மூலம் கிராமங்களை வளர்ச்சியடையச் செய்ய முடியும். கிரதமங்கள் அபிவிருத்தியடையும் போது அங்கு வாழும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடிகிறது.

இத்தகைய கிராமப்புற அபிவிருத்தியின் மூலம் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க முடியும். வறுமைக் கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடக் கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமரோ ஜனாதிபதியோ இதனை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கவில்லை. எமது நாடு ஆசியப் பிராந்தியத்தில் தலை நிமிர வேண்டும். முன்னேற்றமடைந்துள்ள ஏனைய நாடுகளுடன் சரி நிகர் சமானமாக அமரக்கூடியதாக மாற்றம்பெற வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பாகும்.

அடுத்துவரும் ஈராண்டு காலத்துக்குள் எமது நாட்டில் உறுதியானதும் வளமானதுமான கிராம இராஜ்யங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை பொருளாதார வளமுள்ள நாடாக மாற்றம் காணச் செய்ய முடியும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தை முன்னெடுத்துவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிற்கவின் நீண்ட நாள் கனவு நனவாக மாறுவது கண்டு மக்கள் திருப்தி கொள்ள முடியும் என நம்புகின்றோம். அரசின் மற்றொரு ஐந்தாண்டு காலத்திட்டம் வெற்றியளித்திருப்பதையே இதன் மூலம் கண்டு கொள்ள முடிந்துள்ளது. நல்லாட்சியின் மற்றொரு வாக்ககுறுதி மெய்ப்பிக்கப்பட்டுள்ளமை. ஆறுதல் தரக்கூடியதாகவுள்ளது.


Add new comment

Or log in with...