கூட்டு ஒப்பந்தம்; முதற்கட்ட பேச்சு நாளை | தினகரன்

கூட்டு ஒப்பந்தம்; முதற்கட்ட பேச்சு நாளை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை நாளை 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை எதிர்பார்ப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரும், பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார். தோட்டக் கம்பனிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தையே எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவேண்டிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றரை வருட இழுபறியின் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபரில் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபருடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாதிருக்கும் காலப்பகுதிக்கான நிலுவைச் சம்பளத்தை தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும். எனினும், கடந்தமுறை ஏற்பட்ட தாமதத்தின் போதான நிலுவைச் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

அதேநேரம், கூட்டு ஒப்பந்தத்தின் போது வெறுமனே தமது சம்பள அதிகரிப்பு மாத்திரமன்றி, தோட்டங்களின் நலன்புரி குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...