அமெரிக்க இறக்குமதிகளுக்கு துருக்கி அதிரடி வரி அதிகரிப்பு | தினகரன்

அமெரிக்க இறக்குமதிகளுக்கு துருக்கி அதிரடி வரி அதிகரிப்பு

துருக்கியில் பயணிகள் கார்கள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் உட்பட அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்துவான் கையொப்பம் இட்டிருக்கும் ஆணையில், கார்களுக்கான வரி 120 வீதமாகவும். மதுபான வரி 140 வீதமாகவும், புகையிலை வரி 60 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் தடுத்து வைத்திருக்கும் அமெரிக்க பாதிரியார் ஒருவரை நாடுகடத்த மறுத்ததை அடுத்து கடந்த வாரம் துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினிய வரியை இரட்டிப்பாக்கியது.

அமெரிக்க நிர்வாகத்தால் எமது பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாகவே வரிகளை அதிகரிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக துருக்கி துணை ஜனாதிபதி புவத் ஒக்டாய் விளக்கம் அளித்துள்ளார்.

அழகுசாதன பொருட்கள், அரிசி மற்றும் நிலக்கரிக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னணு பொருட்களை புறக்கணிக்கப்போவதாக துருக்கி முன்னதாக குறிப்பிட்டிருந்தது. துருக்கியின் லிரா நாணயம் கடந்த திங்கட்கிழமை சாதனை அளவுக்கு வீழ்ச்சி கண்டபோதும் அது தொடக்கம் தனது இழப்புகளில் சிலவற்றை மீட்டுக்கொண்டது.

எனினும் கடந்த ஜனவரி தொடக்கம் துருக்கி லிரா அமெரிக்க டொலருக்கு நிகராக 34 வீதத்திற்கும் அதிக மதிப்பை இழந்துள்ளது. இதனால் அங்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஜனாதிபதி எர்துவான் கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார். குறித்த பாதியார் விடயத்தில் தம்மை அடிபணியச் செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாகவும் எர்துவான் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...