காசாவுக்கான பிரதான எல்லை வாயிலை திறந்தது இஸ்ரேல் | தினகரன்

காசாவுக்கான பிரதான எல்லை வாயிலை திறந்தது இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புடனான அண்மைய பதற்றங்கள் காரணமாக கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த காசாவுக்கான பிரதான எல்லை வாயிலை இஸ்ரேல் நேற்று திறந்துள்ளது. காசா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக அமைதி நிலவியதால் கெரெம் ஷலோம் எல்லை வாயில் திறக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் பேஸ்புக்கில் நேற்று பதிவிட்டுள்ளார். காசாவுக்கான அடிப்படை கொருட்கள் செல்லும் பிரதான வாயிலாக கெரெம் ஷலோம் உள்ளது.

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மோதல் நிறுத்தம் ஒன்றுக்கு எகிப்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே காசா மீதான இறுக்குதல்களை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டி காசா மக்கள் கடந்த சில மாதங்களால் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையில் அண்மைக்காலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தனது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையைக் கோரி பலஸ்தீனர்கள் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மீது இஸ்ரேலிய துருப்புகளின் துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...