இத்தாலி மேம்பாலம் இடிந்ததில் உயிரிழப்பு 35 ஆக அதிகரிப்பு | தினகரன்

இத்தாலி மேம்பாலம் இடிந்ததில் உயிரிழப்பு 35 ஆக அதிகரிப்பு

மீட்பு பணிகள் தீவிரம்

இத்தாலியின் ஜெனொவா நகரில் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு வீரர்கள், மோப்ப நாய்களின் உதவியோடு மீட்புப் பணியைத் தொடர்கின்றனர். இந்தச் சம்பவத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர் என்றும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமுற்ற பலர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இத்தாலி முழுவதும் உள்ள பாலங்களும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படுமெனப் பிரதமர் குஸைப்பெ கொண்டி கூறியுள்ளார்.

இதுபோன்றதொரு கொடிய விபத்து மீண்டும் ஒருமுறை நடக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தின்போது டஜன் கணக்கான வாகனங்கள் 45 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகை தொடர்ந்து கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 12 பேரை காணவில்லை.

இத்தாலி முழுவதுதிலிருந்தும் வந்த 300 தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்களை கொண்டும், மலையேறும் கருவிகளை கொண்டும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

பாலத்தின் பிற பகுதியும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் நூற்றுகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதிக மழைபெய்து கொண்டிருந்த நேரத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான மொரண்டி பாலம் 1960இல் கட்டப்பட்டது. ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த பாலம், உள்ளுர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டுவருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது.

பாலம் இடிந்த நேரத்தில் அதன் மேல் 30–35 கார்களும், மூன்று கனரக வாகனங்களும் இருந்தன.

பெரிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் பாலத்தின் சில பகுதிகள் சரிந்து ரயில்வே தண்டவாளங்கள், நதி மற்றும் சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் விழுந்தது. தரையில் இருந்த யாரும் இதில் பலியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. சிலர் காயமடைந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.

இத்தாலியின் செஞ்சிலுவை சங்கத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் மார்சிலோ டே ஏஞ்சலிஸ், மீட்புப் பணியாளர்கள் இதை ஒரு நிலநடுக்கம் போன்று கருதி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

“நிலநடுக்கத்தில் மீட்புப் பணி ஆற்றுபவர்களை இந்த விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளோம். இதுவும் நிலநடுக்கம் போன்ற ஒரு சூழலே... மேலும் பிற இடங்களும் இடிந்து போகும் என்ற ஆபத்து இதிலும் உள்ளது” என்று மார்சிலோ டே ஏஞ்சலிஸ் குறிப்பிட்டார்.

“மிகப்பெரிய முழக்கம் ஒன்று கேட்டது. முதலில் மின்னல் என்று நாங்கள் நினைத்தோம்” என இத்தாலி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் பாலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் வசிக்கிறோம் இருப்பினும் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டதுா நாங்கள் பயந்துவிட்டோம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்துவிட்டது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் பாதிப்படைந்த இத்தாலி மக்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மகரோன், தேவைப்பட்டால் பிரான்ஸ் இத்தாலிக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


Add new comment

Or log in with...