நடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம் | தினகரன்

நடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்

ஒரு புகைப்படம் தன்னை அழவைத்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

கன மழை மற்றும் வெள்ளம் கேரளாவை புரட்டிப்போட்டு உள்ளது. வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பம்பை ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினரும் இராணுவத்தினரும் படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகிறார்கள். வெள்ள சேதத்துக்கு உதவ தமிழ் நடிகர்களும் மலையாள நடிகர்களும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

கேரள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதுபோன்ற ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அப்படி வந்த ஒரு புகைப்படம் தன்னை அழவைத்து விட்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்து உள்ளார். அந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்தில் ஒரு சிறுமி கழுத்தளவு வெள்ளத்தில் நடந்து செல்கிறார். அவரது தலையில் உள்ள பாத்திரத்தில் ஒரு நாய்க்குட்டி இருக்கிறது.

அனுபமா வெளியிட்ட இந்த படத்தை ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நாய்குட்டியை காப்பாற்றும் உணர்வு கொண்ட சிறுமியை பாராட்டி வருகிறார்கள்.

அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்துள்ளார்.


Add new comment

Or log in with...