மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் | தினகரன்

மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம்

சுதந்திர தின விழாவில் எடப்பாடி

மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 72ஆவது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்று தேசியக் கொடியின் மாண்பினைப் பற்றி பாடினார் மகாகவி பாரதியார். கம்பீரம் மிக்க நமது கொடியினை, இந்த இனிய நாளில் ஜெயலலிதாவின்

நல்லாசியுடன் இரண்டாவது முறையாக ஏற்றியதை நான் பெருமையாக கருதுகிறேன்.

பல்லாயிரக் கணக்கான நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உடமைகள் மற்றும் இன்னுயிரை ஈந்து பல வருடங்கள் பாடுபட்டதன் விளைவாக பெறப்பட்டது நமது சுதந்திரம். இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நமது தமிழ்நாடு. நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியிலேயே அடிமை விலங்கை தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த இடம் என்ற பெருமையைப் பெற்றது நமது தமிழ்நாடு. ஆயுதம் ஏந்திய போர் தான் காந்தியடிகளுக்குப் பின்னால் அறப்போராக மாறியது. ஆயுதப் போரிலும் அறப் போரிலும் அதிக பங்கு வகித்தது நமது தமிழ்நாடு தான் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமை கொள்ளலாம்.

இந்த வரலாற்று நாயகர்களை நாம் என்றென்றும் போற்றி வணங்க வேண்டும். வட இந்தியாவில் நடந்த சிப்பாய்ப் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்பது வரலாறு.

ஆனால் அதற்கு முன்பே கிட்டத்தட்ட அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக வேலூரில் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் ஓர் புரட்சி நடந்தது.

ஆகவே இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழ்நாட்டில்தான் ஆரம்பித்தது என்பதை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்.

சுதந்திரம் அடைந்து கடந்த 71 ஆண்டுகளில் நாம் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நமது மக்களின் நல்வாழ்விற்காகவும் ஆற்றிய பணிகளை திரும்பிப் பார்க்கின்ற நேரம் இது.

“எல்லோரும் எல்லாமும் பெற்று,

வாழ்வில் வளம் பெறும் வகையிலான

ஆட்சி அமைவதே சிறந்த மக்களாட்சி ஆகும்.

இவ்வாறான மக்களாட்சியில் தான் ஏழைகளும்,

வசதி படைத்தோருக்கு இணையான வசதிகளை

பெற இயலும்” என்றார் ஜெயலலிதா.”

ஜெயலலிதா சொன்னது மட்டுமின்றி, செயலிலும் செய்து காட்டினார். அவர் வழிவந்த தமிழக அரசும், மக்களின் நலனைக் காக்க பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு இறுதி வரை தனக்கென வாழாமல் தமிழ்நாட்டு மக்களுக்காகவே உழைத்த ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபமும் அவர் வாழ்ந்த இல்லத்தை மக்கள் பார்வையிடுவதற்காக நினைவு இல்லமாக மாற்றவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

சோழ வளநாடு சோறுடைத்து எனும் பெரும் மொழியை நனவாக்கும் விதமாக இவ்வருடம் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். நமது சுதந்திர போராட்ட வீரர்கள் போராடி பெற்ற இந்த சுதந்திர திருநாட்டை எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு இணையாக உயர்த்தவும்,

குறிப்பாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்திட தொடர்ந்து பாடுபடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...