நல்லிணக்கத்திற்கு குந்தகமின்றி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்! | தினகரன்

நல்லிணக்கத்திற்கு குந்தகமின்றி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம்!

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் ஒரு நாட்டின் மறுமலர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சகவாழ்வும் நல்லிணக்கமும் இன்றியமையாதவை. இந்த இரண்டுமின்றி பல்லின மக்களைக் கொண்ட நாட்டினால் சுவீட்சத்தையோ அபிவிருத்தியையோ அடைய முடியாது. அந்த வகையில் கடந்த 30 வருட காலம் யுத்தம் இடம்பெற்ற இந்த நாட்டுக்கு இந்த இரண்டும் மிகவும் அவசியமானவை.

இந்த யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்த போதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மையான சுபீட்சம், முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தாது செயற்பட்டனர். குறிப்பாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவமோ முன்னுரிமையோ அளிக்கவில்லை.இவர்களது தூரநோக்கற்ற செயற்பாடுகளால் இந்நாட்டு மக்கள் மத்தியில் 'வெற்றி பெற்றவர், தோல்வியுற்றவர்' என்ற மனப்பான்மை வளரத் தொடங்கியது.

2015ம் ஜனவரி 08 ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததோடு நாட்டின் உண்மையான சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் எது அவசியமோ முக்கியமோ அதற்கு முன்னுரிமையளித்து செயற்படத் தொடங்கியது. இதன் விளைவாக ஏற்கனவே நாட்டின் சமூகங்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள், ஐயங்கள் குறைவடையத் தொடங்கி சகவாழ்வும், நல்லிணக்கமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற ஆரம்பித்தன.

ஆனாலும் நாட்டில் உண்மையான சகவாழ்வும் நல்லிணக்கமும் ஏற்படுவதை விரும்பாத சில சக்திகள் அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. ஆனால் நாட்டு மக்கள் இத்தீய சக்திகளின் நோக்கம், எதிர்பார்ப்புகளை அறியாதவர்கள் அல்லர். அதனால் இவர்களது எதிர்பார்ப்புகள் வெற்றியளிப்பதில்லை. இவ்வாறான சூழலில் தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடித்தல் முறைமைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

இதற்கு அவ்வப்பிரதேச மீனவர்கள் ஆட்சேபனைகளை அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் தென்பகுதி கடற்தொழிலாளர்கள் அத்துமீறி பிரவேசித்து கடலட்டை பிடித்து வருகின்றனர். அதற்கு அப்பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி கடற்தொழில் ஈடுபடுகின்றனர். இச்செயற்பாடுகளினால் கடல் வளம் அழிவுறுவதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் வடக்கு கிழக்கு கடலில் கிடைக்கப் பெறும் பாரிய மீன்வள அறுவடையை பங்கு போடவே தென்பகுதி மீனவர்கள் இங்கு வந்துள்ளனர் என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி முறைகளான சுருக்க வலை, ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் போன்றவற்றைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடந்த 2ம் திகதி முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தை முற்றுகையிட்டு ஆட்சேபனை போராட்டம் நடத்தியதோடு கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அப்பகுதிக்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக மீனவர்களிடம் உறுதியளித்தார். அதற்கேற்ப மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும் திங்களன்று மாலையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தென்பகுதி மீனவர்களை நாயாற்று மீனவர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இது இருதரப்பினருக்குமிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியது. இதே தின இரவில்தான் நாயாற்று பிரதேசத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 8 மீன்வாடிகளும், 3 படகுகளும் 27 வலைகளும் இனந்தெரியாதோரால் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. இது பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் காரணமாக நாயாற்று பிரதேச மீனவர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான நஷ்டத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலைமையானது அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பெரும் பாதகமாக அமையலாம். அது சில சமயம் தேசிய பிரச்சினையாகக் கூட உருவெடுக்கலாம் என்றும் இவ்விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமானது என்றும் சகவாழ்வு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இவ்விவகாரம் நியாயமான முறையில் அணுகப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். ஏனெனில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று தசாப்த காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் தற்போதுதான் தம் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபடுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு பொதுவான சட்ட ஒழுங்கு உள்ளது. அதனை தென்பகுதி மீனவர்கள் மீறுகின்றனர். ஆனால் வடக்கு மீனவர்கள் ஒருபோதும் தென்பகுதி கடற் பிரதேசங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழில் ஈடுபடுவதில்லை.

ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில் தீர்த்து வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதுவே நாட்டின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பக்கபலமாக அமையும்.


Add new comment

Or log in with...