சுவீடனின் பல நகரங்களில் வாகனங்கள் மீது தீ வைப்பு | தினகரன்

சுவீடனின் பல நகரங்களில் வாகனங்கள் மீது தீ வைப்பு

சுவீடனில் ஒரே இரவில் பல நகரங்களிலும் பல டஜன் கார் வண்டிகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. இது ஒரு ஒருங்கிணைந்த குற்றச்செயல் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பு உடையுடன் வந்த கும்பல் இந்த தீ மூட்டும் செயலில் ஈடுபட்டிருப்பதோடு இதனால் சுமார் 80 வாகனங்கள் தீயில் கருகியுள்ளன. மேற்கு நகரான கோதன்பேர்க்கில் அதிக சேதங்கள் ஏற்பட்டபோதும் 100 கிலோமீற்றருக்கு அப்பா உள்ள நகரங்களிலும் இதே போன்ற தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

“ஒரு இராணுவ நடவடிக்கை போன்று ஒருங்கிணைந்த தாக்குதலாக இது பார்க்க தெரிகிறது” என்று பிரதமர் ஸ்டபன் லொப்வன் குறிப்பிட்டுள்ளார். தலைநகர் ஸ்டொக்ஹோமிலும் ஒருசில கார் வண்டிகளுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த இளைஞர்கள் கார் வண்டி கண்ணாடிகளை உடைத்து உள்ளே எரியக் கூடிய திரவங்களை ஊற்றி தீமூட்டியதாக சுவீடன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவர்கள் பொலிஸ் நிலையங்கள் மீதும் கல்லெறிந்துள்ளனர்.

இந்த தீ மூட்டல் சம்பவத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவீடனில் இடம்பெற்ற கலவரத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தீமூட்டல் சம்பவங்களை ஒத்ததாக இது உள்ளது.


Add new comment

Or log in with...