Thursday, March 28, 2024
Home » செலவு செய்யும் தேர்தல் முறைக்கு முகம்கொடுக்க எவராலும் முடியாது

செலவு செய்யும் தேர்தல் முறைக்கு முகம்கொடுக்க எவராலும் முடியாது

by sachintha
November 24, 2023 8:36 am 0 comment

இது பணத்தாசையால் பொம்மைகளை உருவாக்கும் தேர்தல் முறையாகும்

பிரதமர் தினேஷ் குணவர்த்தன

இலங்கையில் ஒரு சாதாரண வேட்பாளருக்கு செலவு செய்யும் தேர்தல் முறைக்கு முகம் கொடுக்க முடியாது. இத்தகையதொரு தேர்தல் முறையின் மூலம் பணத்தாசையினால் பொம்மைகளே உருவாக்கப்படும் நிலை உள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் (22) நடைபெற்ற, பிரதமர் அலுவலகம் உட்பட 33 நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,“அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்டது. அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்குப் பின்னரும் இந்த பாராளுமன்றத் தேர்தல் முறையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு உள்ளாகியிருக்கின்ற காரணத்தினால், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இலங்கையில் ஒரு சாதாரண வேட்பாளருக்கு இவ்வாறு செலவு செய்யும் தேர்தல் முறைக்கு முகம் கொடுக்க முடியாது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இத்தகையதொரு தேர்தல் முறையின் மூலம் பணத்தாசையினால் பொம்மைகளே உருவாக்கப்படும் நிலை உள்ளது. இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக வேறு வழிகளுக்கு திரும்புவதற்கான நிலையே உருவாகும். அதிலிருந்து விடுபடக்கூடிய எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் முறையொன்றை நோக்கி நாம் செல்ல வேண்டும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு தேர்தல் தொகுதி, அவ்வாறே விகிதாசார தேர்தல் முறையை உள்ளடக்கிய பாராளுமன்றத்தின் மூலம் அனைத்து மக்கள் பிரிவினரும் பங்கேற்கக்கூடிய ஒரு தேர்தல் முறையை உருவாக்க முடியும். அதை வெற்றியடையச் செய்வதற்காக நாம் உழைக்க வேண்டும். நாம் உள்ளூராட்சி முறைமைக்கு கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினோம். உள்ளூராட்சி முறைமைக்கு பாதிப்பில்லாத வகையில் அதனை திருத்தியமைக்க வேண்டிய நெருக்கடிக்கு நாம் அனைவரும் முகம்கொடுத்துள்ளோமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT