Friday, April 19, 2024
Home » அரசியலமைப்பு பேரவையை ஆராய்வதற்கு தெரிவுக்குழு
பொலிஸார், நீதிமன்ற செயற்பாடுகளை சீர்குலைக்கும் சதி

அரசியலமைப்பு பேரவையை ஆராய்வதற்கு தெரிவுக்குழு

-அடுத்த வாரம் நியமிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

by sachintha
November 24, 2023 6:25 am 0 comment

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு அதற்குள்ளேயே சதி முயற்சி நடத்தப்படுவதாகவும் தெரிவிப்பு

அரசியலமைப்பு பேரவையை ஆராய்வதற்காக தனியான பாராளுமன்ற தெரிவுக்குழு அடுத்த வாரம் நியமிக்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையின் சில உறுப்பினர்கள் நாசவேலையில் ஈடுபட்டால், இந்த முறைமை தொடர முடியாதெனவும், அவர் தெரிவித்தார்.

“பொலிஸ் மா அதிபர் இல்லை. நீதிபதிகள் இல்லை. நாங்கள் எப்படி நீதியை வழங்குவதென எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பொலிஸோ அல்லது நீதித்துறையோ வேலை செய்ய முடியாது” எனவும், ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு அதற்குள்ளேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் செயற்பட முடியாத நிலை காணப்படுவதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உயர் பதவிகளுக்கு நியமிப்பதற்கு அனுப்பப்பட்டுள்ள பெயர்களை அரசியலமைப்பு பேரவை அனுமதிப்பதற்கு தாமதப்படுத்துவது ஏன் என்பதை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு பேரவையின் சில உறுப்பினர்கள் அதனை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு, அரசியலமைப்பு பேரவை என எந்த பெயர்களில் குறிப்பிடப்பட்டாலும் அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியே என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் அவரது கருத்துக்களை வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக விசேட தெரிவுக்குழு ஒன்றை அடுத்த வாரம் நாம் நியமிக்கவுள்ளோம். அரசியலமைப்பு பேரவை முறையாக செயற்படாததால் தற்போது நாட்டில் பொலிஸ் மாஅதிபரும் இல்லை, நீதிபதிகளும் இல்லை. இவ்வாறான நிலையில் நீதியை நிலைநாட்ட முடியாமல் உள்ளது.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிபதி பந்துல கருணாரத்னவின் பெயரை அடுத்த பதவி உயர்வுக்காக பிரதம நீதியரசரே எனக்கு வழங்கினார். நான் அதனை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பினேன். எனினும் அரசியலமைப்பு பேரவை அதனை தடுத்து வைத்திருப்பது ஏன் என எனக்குத் தெரியாது.

குறிப்பாக அரசியலமைப்பு பேரவையின் சில உறுப்பினர்கள் அதன் நடவடிக்கைகளை குழப்புவதற்கு உள்ளே இருந்து செயற்படுவார்களானால் எமக்கு இந்த முறைமையை செயற்படுத்த முடியாமல் போகும்.

பொலிஸ் மாஅதிபர் நியமனம் மற்றும் நீதிபதியின் பதவி உயர்வு தொடர்பாக அரசியலமைப்பு பேரவைக்கு ஒரு தீர்மானததுக்கு வர முடியாமல் உள்ளதாக சபாநாயகர் எனக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அந்த நியமனத்துக்கு குறித்த பேரவையில் 03 பேர் ஆதரவாகவும் 3பேர் எதிராகவும் வாக்களித்திருப்பதுடன் 2 பேர் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

ஒருவர் இன்னும் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படாமல் உள்ளார். இவ்வாறு செயல்படும்போது எவ்வாறு எம்மால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்?

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியே அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் கீழேயே வருகிறது. ஜனாதிபதி பெயர்களை அனுப்பினால் அவர்கள் தகுதியானவர்களா இல்லையா என ஆராய்ந்து பொருத்தமானவர்களின் பெயரை அந்தப் பேரவை அனுப்புவதே இடம் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT