Home » நாட்டில் யுத்தம் இல்லை என்பதால் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது

நாட்டில் யுத்தம் இல்லை என்பதால் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது

by sachintha
November 24, 2023 8:34 am 0 comment

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன்

நாட்டில் யுத்தம் இல்லை என்பதால் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாதென்றும் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்தியதன் பெறுபேற்றை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வெளிப்படுத்தியதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பிரிவினைவாத கொள்கையுடையவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் செயற்படுகிறார்கள் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் வடக்கு இராணுவம், கிழக்கு இராணுவம், தெற்கு இராணுவமென வேறுபாடுகள் கிடையாது. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரே இராணுவமே உள்ளதென்றும் தெரிவித்தார்.

வடமாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தம் இடம்பெற்றதால் இராணுவத்தை ஒரு தரப்பினர் இன்றும் வெறுக்கிறார்கள் .இந்நிலை மாற்றம் பெற வேண்டுமென்றும், அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 423 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு இராணுவத்தின் எண்ணிக்கையை 1 இலட்சமாகவும், கடற்படையின் எண்ணிக்கையை 35 ஆயிரமாகவும், விமானப்படையின் எண்ணிக்கையை 20 ஆயிரமாகவும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முப்படையினதும் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானத்தால் எவரும் பாதிப்படைய மாட்டார்களென்றும், அவர் தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“பொருளாதார பாதிப்பு தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது. அத்தியாவசிய பொருள் மற்றும் சேவை தட்டுப்பாட்டினால் வரிசை யுகம் தோற்றம் பெற்றது. இதனால் போராட்டங்கள் தலை தூக்கி பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.பொருளாதார பாதிப்புக்கு 75 ஆண்டுகால அரசியல் கட்டமைப்பின் தீர்மானங்கள் ஒரு காரணியாக அமைந்ததென்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற இனக் கலவரங்கள், 30 வருடகால யுத்தங்கள் பொருளாதார பாதிப்பை மென்மேலும் தீவிரப்படுத்தியது. நாட்டுக்கு எதிராக செயற்பாடுகள் நாட்டுக்குள்ளேயே தோற்றம் பெற்றன. பிரபாகரன், ரோஹன விஜயவீர, சஹ்ரான் ஆகியோர் இலங்கையர்களே.மாறுப்பட்ட கொள்கைகள் மற்றும் முரண்பாடுகளினால் இவர்கள் ஆயுதமேந்தினார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2022.07.09 ஆம் திகதியன்று பதவியிலிருந்த முப்படையினர் தான் தற்போதும் பதவியில் உள்ளார்கள். ஆனால் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்றுணிவுடன் சிறந்த தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவம் முப்படைகளுக்கும், நாட்டுக்கும் கிடைத்துள்ளதால் பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளோம்.நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT