அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்களால் பரபரப்பு | தினகரன்

அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர்களால் பரபரப்பு

மதுரையில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளர் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி கடந்த 2014-ஆம் ஆண்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது கருணாநிதியின் சம்மதத்துடன் நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் காரணத்தை ஆராய்ந்த போது தனது ஆதரவாளர்களுக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கும் கட்சியில் முக்கிய பதவிகள் கொடுக்கப்படாததால் அழகிரி பிரச்சினையை கிளப்பியதாக தகவல்கள் வந்தன.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் ஈடுபட்டும் அது எடுபடவில்லை. அவ்வப்போது திமுக குறித்து அழகிரி பேசி வந்தாலும் சமீபகாலமாக கட்சி குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார் அழகிரி. இந்நிலையில் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மதுரையிலிருந்து குடும்பத்தினருடன் சென்னை வந்தார். இதையடுத்து கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்தபடி மிக குறைந்த கால கட்டத்திலேயே அழகிரியால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

நேற்று முன்தினம் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி , கருணாநிதியின் உடன்பிறப்புகள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்று ஒரு குண்டை போட்டார். இதையடுத்து திமுகவில் அழகிரிக்கு இடமே இல்லை என்று அறிவித்து பேராசிரியர் க.அன்பழகன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மதுரையில் அழகிரி குறித்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் கலைஞர் திமுகவின் பொதுச் செயலாளரே என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அழகிரி நடந்து வருவது போன்ற படமும் தயாநிதி அழகிரியின் படமும் அதில் இடம்பெற்றுள்ளது.


Add new comment

Or log in with...