சட்டம் ஒழுங்குக்கு மதிப்பளிப்பது அவசியம் | தினகரன்

சட்டம் ஒழுங்குக்கு மதிப்பளிப்பது அவசியம்

ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் மறியல் போராட்டம், தொழிற்சங்க நடவடிக்கை என்றபடி நாளுக்குநாள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் ஒரு கலாசாரமாக இந்நாட்டில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்நிலைமை 2015 ம் ஆண்டின் பின்னர் பெரிதும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் வெலிக்க​ைட சிறைச்சாலையில் உள்ள பெண் சிறைக்கைதிகளில் சிலர் நேற்றுமுன்தினம் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக இச்சிறைச்சாலைக்கு முன்பாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை சிறைக்கைதிகளின் உறவினர்கள் சிலரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அதாவது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் வெலிக்க​ைட சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளில் சிலரே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தம்மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வெளியே இருந்து தமக்காக கொண்டு வரப்படும் உணவுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டை நீக்குமாறும் கோரியே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சிறைச்சாலையினுள் இருந்தபடி கைதிகள் சிலர் வெளியே குற்றச் செயல்களை இயக்குவது மற்றும் போதைப்பொருள் குற்றங்களை முன்னெடுப்பது தொடர்பான தகவல்கள் விசாரணைகளில் வெளியானதை அடுத்து அரசாங்கம் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான இச்செயற்பாட்டின் கீழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் இக்கைதிகளுக்காக கொண்டுவரப்படும் உணவை எடுத்துச் சென்று வழங்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது இடமாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவிப்பதே கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்துவதன் பின்புலம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் சிறைச்சாலை சிறைக்கைதிகள் கூட அச்சம் பீதியின்றி சிறைச்சாலை கட்டட கூரைகள் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைத்தோங்கியுள்ளன.

இவ்வாறானதொரு ஜனநாயக சுதந்திரம் 2015 க்கு முன்னர் நாட்டில் காணப்படவில்லை. 2015இல் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை அளித்து ஜனநாயக சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பயனாக அச்சம் பீதியின்றி நாட்டில் எந்த இடத்திற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் சென்று வரக் கூடிய சுதந்திர சூழல் நாட்டில் காணப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்த இந்த ஜனநாயக சூழலைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடியையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் பொருட்டு வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் இடம்பெற்று வருவதை மக்கள் மறந்து விடவில்லை. இந்த ஜனநாயக சூழலைப் பயன்படுத்தியே இந்த பெண் சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள். இவர்கள் சுழற்சி முறையில் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள் என்றால் அதற்கு சிறைச்சாலையினுள் இடமளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2015ம் ஆண்டில் நவம்பர் மாதம் வெலிக்க​ைட சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 சிறைக்கைதிகள் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டனர். அன்றைய ஆட்சியாளர்கள் சிறைக் கைதிகளின் ஆர்ப்பாட்டங்களை விசேட அதிரடிப் படையினரைக் கொண்டுதான் அடக்கினர். அதன் விளைவாகவே 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இவ்வாறுதான் கடந்த ஆட்சியாளர்கள் ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களையும் ஆட்சேபனைகளையும் அடக்கினர். நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் எந்த ஒரு விவகாரத்தையும் கொடுங்கரம் கொண்டு அடக்கவுமில்லை. அவற்றுக்கு எதிராக துப்பாக்கிகளை பாவிக்கவுமில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் நிவித்திகலையில் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.

“கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று சிறைக்கைதிகளை படுகொலை செய்து பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காண முடியாது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும் காலம் முடிந்து விட்டது. இப்பிரச்சினைக்கு மிகவும் ஆழமாக சிந்தித்து பொருமையுடன் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் வெலிக்க​ைட சிறைச்சாலையில் சிறைச்சாலை கட்டட கூரை மீது ஏறி சில பெண்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் சிறைச்சாலை ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்தோடு கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது என்பதற்காக தற்போது இடம்பெற்றும் செயற்பாடுகளில் மாற்றங்களை செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.

உண்மையில் சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்கள் சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பது அவசியமானது. எனெனில் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணி குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவே அரசாங்கம் உழைத்து வருகின்றது. அரசாங்கத்தின் அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டிய பொறுப்பு சிறைக்கைதிகளுக்கும் உள்ளது. அவ்வாறான ஒத்துழைப்பின் ஊடாகத்தான் போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சகல குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவிருக்கும். இதனை உணர்ந்து செயற்பட வேண்டியது சகலரதும் பொறுப்பு. நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு சிறந்த சமுகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.


Add new comment

Or log in with...