Thursday, April 18, 2024
Home » நற்பண்பின் சிறப்பு

நற்பண்பின் சிறப்பு

by sachintha
November 24, 2023 12:44 pm 0 comment

‘அஹ்லாக்’ என்பது அரபு மொழியில் நற்கருமங்கள், ஒழுக்க விழுமியங்கள், நல்லொழுக்கங்கள் என்பவற்றை குறிக்கின்றது. பொதுவாக சமூகத்தில் நற்கருமங்கள் என்று பயன்படுத்தப்பட்டாலும் ஷரீஅத்தில் செயல்களின் சீரிய ஒழுங்கு முறையை சுட்டிக் காட்டுகின்றது. இந்த நற்பண்புகளை பொறுத்தவரையில் ஒரு மனிதனின் அன்றாட செயல்பாடுகள் அனைத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த செயல்பாடுகள் இறைவனிடத்தில் சிறந்ததாக அமையும்.

இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அடுத்த அம்சங்களைப் போன்று நற்பண்புகளும் காணப்படுகின்ற போதுதான் இஸ்லாமிய வாழ்வு பரிபூரணமடைகின்றது. நபி (ஸல்) அவர்கள் நற்பண்புகளை பூரணப்படுத்துவதன் நோக்காகத்தான் உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

‘நற்பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’

(ஆதாரம்: முவத்தா)

அதேபோன்று நல்ல ஒழுக்க விழுமியங்களோடு வாழ்வதென்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவாகக் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைப்பதற்கு முன்னறும், பின்னறும் சிறந்த நற்பண்புடையவர்களாகவே இருந்துள்ளார்கள். இதன் காரணமாகத்தான் அன்னாரை அவர்களோடு வாழ்ந்த அன்றைய சமூகம் ‘அஸ் ஸாதிக்’, ‘அல் அமீன்’ என்ற சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கினார்கள். மேலும் மனைவிமார்கள், நண்பர்கள், ஏன் எதிரிகளிடம் கூட நற்பண்புடயவர்களாகவே நடந்துள்ளார்கள்.

நாம் இன்று சமூகத்தில் பார்க்கின்ற போது நற்பண்பு இல்லாதவர்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும், நற்பண்புடையவர்கள் சமூகத்தில் முன்னிலையில் இருப்பதையும் காணமுடியும். எனவே தான் தனி மனிதன், குடும்பம், சமூகம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு நற்பண்பு முக்கிய காரணமாக அமைகின்றது. அதேபோன்று ஆரம்பத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் நற்பண்பு பாரிய தாக்கத்தை செலுத்தி உள்ளது. இதற்கு மூதாட்டியின் சம்பவத்தை சான்றாக குறிப்பிட முடியும்.

‘மறுமையில் அடியானின் தராசில் நற்பண்புகளை விடக் கூடியது எதுவும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: அபூதாவுத்)

அதேபோன்று ஒருவர் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களை உறுதியாக ஈமான் கொள்கின்ற போது அவரிடத்தில் இருந்து நற்பண்புகள் வெளியாகின்றதை பார்க்க முடியும். எனவே அவர் இவ்வாறு ஈமான் கொள்கின்ற போது அவரது அனைத்து செயற்பாடுகளும் சிறந்ததாகவே அமையும். அல்லாஹ் அல் குர்ஆனில் 70ற்கு மேற்பட்ட இடங்களில் ஈமானையும், நற்பண்புகளையும் இணைத்து கூறியதைப் பார்க்க முடியும். அல்லாஹ் வலியுறுத்தி கூறியுள்ள விடயமாக நற்பண்புகள் காணப்படுகிறது.

எனவே இவ்வாறான நற்பண்புகள் எம்மிடத்தில் வருகின்ற போதுதான் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்களாகவும், வாழும் சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவர்களாகவும் மாறுகின்றோம்.

ஆகவே எமது வாழ்வு நற்பண்புகள் நிறைந்ததாக மாறுவதற்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT