பாடசாலை கிரிக்கெட் தேசிய வேலைத்திட்டம்; மஹேல,வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம் | தினகரன்

பாடசாலை கிரிக்கெட் தேசிய வேலைத்திட்டம்; மஹேல,வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்டைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது தொடர்பான மூன்றாண்டு தேசிய திட்டத்தின் இரண்டாவது கருத்தரங்கு இலங்கையின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, சிதத் வெத்தமுனி, ரொஜர் விஜேசூரிய மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் பங்குபற்றலுடன் கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி பிரிவு மற்றும் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது இவ்வருடம் நடைபெறுகின்ற 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விசேட கருத்தரங்களில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான சிதத் வெத்தமுனியால் பாடசாலை கிரிக்கெட் முதல் முதல்தரப் போட்டிகள் வரை எவ்வாறான பாணியில் துடு;ப்பாட்டத்தை வீரர்கள் பின்பற்ற வேண்டும், அதுதொடர்பில் பயிற்றுவிப்பாளர்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என தெளிவுபடுத்தினார்.

இதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவினால், கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்களின் அபிவிருத்தி மற்றும் ஆளுமை தொடர்பில் உதாரணங்களுடனான செயன்முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களில் ஒருவராக செயற்படுகின்ற ருச்சிர பல்லியகுருவினால் கிரிக்கெட் வீரர்களின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் தொடர்பாகவும், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளரான ஜயன்த செனவிரத்னவினால் பாடசாலை கிரிக்கெட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் தொடர்பிலும் வீரர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.

இவ்விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமிடம் கருத்து வெளியிடுகையில், கிரிக்கெட் விளையாட்டுக்கு இன, மத,மொழி வேறுபாடு கிடையாது. இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற பல வீரர்கள் எம்மிடம் உள்ளன. அவர்களது சேவை இலங்கையில் உள்ள ஒருசிலருக்கு பெறுமதி வாய்ந்ததாக இருக்காவிட்டாலும், சர்வதேச அரங்கில் இவர்களது பெறுமதி இன்றுவரை இருந்துகொண்டு வருகின்றது. எனவே எமது கிரிக்கெட் விளையாட்டை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பாடசாலை மட்டத்தில் உள்ள வீரர்களை தயார்படுத்த வேண்டும்.

இதற்காகத் தான் நாங்கள் மூன்றாண்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தோம்.

எனவே, இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களை உலக தரம் வாய்ந்த வீரர்களாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என தெரிவித்தார்.இதுதொடர்பில் மஹேல ஜயவர்தன தனது உரையில் கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் முறை தான் உலகில் மிகச் சிறந்த கட்டமைப்புடன் நடைபெறுகின்ற போட்டித் தொடராகும். இதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். நான் இதுவரை சென்ற எந்தவொரு நாட்டிலும் அங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறான திட்டங்கள் இல்லை.

இதேவேளை, கல்வி அமைச்சினால் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு மிகப் பெரிய ஒத்துழைப்புகள் கிடைக்கின்றன. இதுதொடர்பில் நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான இந்த மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் ஊடாக பிற மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு பந்துகள், துடுப்பு மட்டைகள், கிரிக்கெட் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் தற்போது பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பிற மாவட்டங்களில் உள்ள 6 முக்கிய மைதானங்களை அபிவிருத்தி செய்து பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை மாத்திரம் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

(பீ.எப். மொஹமட்)


Add new comment

Or log in with...