போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர், சிறைச்சாலையின் கூரையில் மீதேறி மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பில் ஆராய, விசேட அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி இன்று (14) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி தெரிவித்தார்.
சிறைச்சாலையினுள் பெண்கள் தொடர்பில் கழிப்பிட வசதி உள்ளிட்ட உரிய வசதிகள் இல்லை எனவும், வழக்குகள் துரிதமாக இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்து, தங்களது வழக்குகளை துரிதப்படுத்துவதோடு, தங்களுக்கு பிணை வழங்குமாறு தெரிவித்து, நேற்றையதினம் (13) முதல் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் சிலர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
யார் எவ்வாறு போராட்டம் நடத்தினாலும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் மாற்றம் செய்ய இயலாது எனவும், உரிய வழிமுறைகள் பேணப்பட்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என, நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள, நேற்றைய தினம் (13) நிவிதிகலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை, 5 கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுக்கிடையே நேற்று பிற்பகல் அளவில் இடம்பெற்ற சண்டையில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment