கூரை மீது ஏறினாலும் சிறை செயற்பாடுகளில் மாற்றம் கிடையாது | தினகரன்


கூரை மீது ஏறினாலும் சிறை செயற்பாடுகளில் மாற்றம் கிடையாது

* பெண் கைதிகளின் பிரச்சினைகளை ஆராய உத்தரவு
* துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம்

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம் நடத்து வது குறித்து ஆராயுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். கூரை மேல் ஏறி யாராவது போராட்டம் நடத்தினாலும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் மாற்றம் செய்ய இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகாலம் போலன்றி தற்பொழுது எவருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை இருப்பதாக தெரிவித்த அவர் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காலம் முடிந்து விட்டது என்றும் கூறினார்.

நிவிதிகலயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் பெண்கைதிகளின் போராட்டம் பற்றி ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள். 

இதற்குப் பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாருக்கும் எங்கும் போராட்டம் செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படமாட்டாது. சிறைச்சாலைகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நான் எவ்வாறாவது தடுத்து நிறுத்துவேன்.

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது பெண் கைதிகள் ஏறி போராட்டம் நடத்துவது குறித்து ஆராயுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.கூரைமேல் அன்றி வேறு எங்கு ஏறினாலும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது.

2012 ஆம் ஆண்டு 27 சிறைக் கைதிகளை கொலை செய்தது போன்று எம்மால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. மிகவும் ஆழமாக சிந்தித்து பொறுமையுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

விசேட நீதிமன்றத்தினூடாக முன்னெடுக்கப்படும் சகல விடயங்களையும் அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும் சம்பிக ரணவக்கவும் தான் முடிவு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருப்பது பற்றியும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அதற்கும் பதிலளித்த அமைச்சர், அவர்கள் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களன்றி நீதிபதிகளல்ல. விசேட நீதிமன்றங்களை நான் தான் உருவாக்குகிறேன்.

மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஏதாவது பிரச்சினையிருந்தால் என்னிடம் நேரடியாக வினவமுடியும் என்று குறிப்பிட்டார். (பா)


Add new comment

Or log in with...