'பராசக்தி'யில் நாட்டின் நிலையைச் சொன்னவர் கருணாநிதி: நடிகர் சிவகுமார் புகழாரம் | தினகரன்

'பராசக்தி'யில் நாட்டின் நிலையைச் சொன்னவர் கருணாநிதி: நடிகர் சிவகுமார் புகழாரம்

'பராசக்தி' திரைப்படத்தில் நாட்டின் நிலையை எடுத்துச் சொன்னவர் கருணாநிதி என நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், "சிவாஜி ஒரு சகாப்தம்' எனும் தலைப்பில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:

நாடக நடிகராக இருந்து நடிகர் திலகமாக உயர்ந்தவர் சிவாஜி. ஆனால் அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை மிகவும் கசப்பாகவே இருந்தது. அவரது கடினமான உழைப்பும் கலைத்திறனும் தொழிலை உயிராய் நேசித்த பண்பும்தான் அவரைத் திரையுலக சகாப்தமாக உயர்த்தியது. பராசக்தி படத்தை நான் எனது 10 வயதில் பார்த்தேன். அந்தப் படம் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. அதில் நடிக்கும்போது சிவாஜிக்கு 24 வயது. அந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவரான கருணாநிதிக்கு 28 வயது.

இந்த ஒரு படத்தில் மொத்த நாட்டின் நிலையைச் சொல்லி இருப்பார் கருணாநிதி. நீதிமன்ற காட்சிதான் அதற்கு சாட்சி. வரலாறு படைத்தது பராசக்தி. அந்தப் படத்தில் நடிக்கும்போது அவர் வாங்கிய மாத ஊதியம் 250 ரூபா மட்டுமே. அதற்கு முன் அவரைக் கேவலமாகப் பேசியவர்கள் ஏராளம்.

சிவாஜி துரோணர்; நான் ஏகலைவன் அப்படித்தான் நான் நடிப்பைக் கற்றேன். சிவாஜி எனும் பெயரை அவருக்கு சூட்டியவர் பெரியார்.

சரித்திரம் மாறாமல் நடித்த நடிகர் அவர் மட்டுமே. கருணாநிதி வசனம் எழுதி அவர் நடித்த படங்கள் ஏராளம். மனோகரா படத்துக்கு அப்போது அண்ணா சிபாரிசு செய்தது சிவாஜியைத்தான். 1957 பெப்ரவரி 2ஆம் திகதி வெளிவந்த அமரகாவியம் படத்துக்கு முன் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். அவரது பாவமன்னிப்பு படம் வெள்ளிவிழா கண்டது. சிவாஜி சொந்தமாக நாடக மன்றத்தைத் தொடங்கியது 1957ஆம் ஆண்டில்தான்.

அதேபோல புகழின் உச்சத்தில் இருந்து அதன்பின் வீட்டில் இருந்தபோதும் அவரை சந்தித்தேன். அவருக்கும் எனக்குமான நட்பானது தந்தைக்கும் மகனுக்குமானது. இந்தப் பிறவியில் பிரபு, ராம்குமார் இருந்தாலும் அவருடைய உண்மையான மகன் நான்தான். இந்த மண்ணில் எத்தனை பிறவி எடுத்தாலும் அவருக்கு நான்தான் மகன் என்றார்.


Add new comment

Or log in with...