Friday, March 29, 2024
Home » பாவமன்னிப்பின் நற்பலன்கள்

பாவமன்னிப்பின் நற்பலன்கள்

by sachintha
November 24, 2023 9:25 am 0 comment

பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப்படுவதும் மனிதக் கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமேயாகும். மழையின்மைக்கு மனிதன் கூறும் காரணங்களாக ஓசோனில் ஓட்டை… வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல். மழை பொழியாமல் இருப்பதற்கு இன்றைய விஞ்ஞானமும் இவ்வாறு பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்.

ஆயினும், இஸ்லாம் இன்னொரு கோணத்தில் இதனைப் பார்க்கிறது. மனிதன் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை பெய்யாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம் என்று இஸ்லாம் கூறுகின்றது. நல்லவன் ஒருவன் இப்பூமியில் வாழ்கின்றான் என்றால் அவனால் சக மனிதன் நலம்பெறுவதுடன், ஏனைய உயிரினங்களும் நலம் பெறுகின்றன. அதேநேரம் தீயவன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவனால் பாதிப்படைவது சக மனிதன் மட்டுமல்ல.. மாறாக, அவன் வாழும்பகுதி, கால்நடைகள், ஏன் மரங்கள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். (நபிமொழி)

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்), (இவர்) ஓய்வு பெற்றவராவார், அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள், “இறைத்தூதர் தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர். ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையில் இருந்தும் நிம்மதிபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன” என்று சொன்னார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தீயவன் ஒருவன் உலகில் உயிர் வாழ்கின்றான் என்றால் அவன் தீயவனாக இருப்பதன் பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. அவன் வாழும் பகுதியில் இருக்கும் கால்நடைகள், மரம் செடிகொடிகள்கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும்போது அவனது பாவத்தின் காரணத்தால் மழை தடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். உலகளாவிய ரீதியாகப் பார்க்கும்போது மழைக்குக் காரணமாக அமையும் மரம் செடி கொடிகளை அவன் அழிக்கின்றான் என்பது இந்நபி மொழியின் இன்னொரு கோணம் ஆகும். எனவேதான், ‘கெட்டவன் இறக்கும்போது படைப்பினங்கள் அனைத்தும் நிம்மதி பெறுகின்றன’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆக, மனிதர்கள் செய்யும் தவறுக்கு இயற்கையையும், இறைவனையும் குறை கூறுவது முறையற்ற செயல். வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டே, ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்று வெற்றுக்கூச்சல் போடுவதால் என்ன பயன்? பசுமை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு பசுமைவழிச் சாலைகள் அமைப்பதால் மழை நீர் தடுக்கப்படும் என்பதை ஏன் உணருவதில்லை.

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர் துளி’ என்பது சாத்தியமாக வேண்டும் என்றால் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால்.. மரங்களை அழிப்பவர்கள் இயற்கைச் சீற்றத்தால் அழிவதற்குள் இறைவனின் சீற்றத்தால் அழிவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

“விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உள்நின்று உடற்றும் பசி” என்ற வள்ளுவன் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. ஆம், மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.

வான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைச்சல் இருக்காது. அதனால் பஞ்சமும், பசியும் உலகத்தை வருத்தும் என்பது இதன் பொருள்.

மரங்கள் அழிக்கப்படுவதன் மூலம் விண்ணின் மழைத்துளி தடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தனது பாவச்செயல்களாலும் மழையை மனிதன் வரவிடாமல் தடுக்கின்றான். ஆகவே இறைவனின் கோபப்பார்வை அவர்கள் மீது இறங்குகிறது. தத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

“மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (அல் குர்ஆன் 6:6)

இவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? சுயநலம் கொண்ட தங்களது மோசமான செயல்களால் மழையைத் தடுத்தார்கள். நதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். தண்ணீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஆகவே வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் அவர்களை அழித்தான். அதேவேளை மீண்டும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் இறைவனே கற்றுத்தருகின்றான். ஆம், செய்த செயல்கள் தவறுதான் என்று தெரிந்துவிட்டால் பாவ மீட்சி செய்யுங்கள். செய்த பிழையைத் திருத்துங்கள். தொடர் மழையைப்பெறலாம் என்றும் இறைவன் கூறுகின்றான்.

“உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்”

(அல் குர்ஆன் 71:10-12)

மின்ஸார் இப்றாஹீம்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT