திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள் | தினகரன்

திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள்

திமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவருமே என் பின்னால்தான் உள்ளார்கள் என்றும் காலம் பதில் சொல்லும் என்றும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓகஸ்ட் 7ம் திகதி உயிரிழந்தார். அவரது நினைவிடம் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் அமைக்கப்பட்டது.

கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று தனது குடும்பத்துடன் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, எனது தந்தையிடம் எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கலைஞர் அவர்களுடைய உண்மையான விசுவாசமுள்ள அனைத்து திமுக தொண்டர்களும் என் பின்னால்தான் உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்குக் காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது ஆதங்கம் சொந்த விஷயமா? கட்சி தொடர்பானதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார்.

இன்று நடைபெறும் திமுக செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே திமுக செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார்.

கட்சி மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் 2014 மார்ச் மாதம் 25ம் திகதி திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...