3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டம் | தினகரன்

3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:-

செயல்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பவுள்ளோம். இதுதவிர மேலும் புதிய செயற்கைக்கோளும் பட்டியலில் சேரலாம்.

மாதத்துக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை அனுப்புவதை இஸ்ரோ நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இதை மாதத்துக்கு 2 வீதம் ஆண்டுக்கு 24 -ஆக மாற்றவுள்ளோம். அடுத்த ஆண்டில் மட்டும் பெப்ரவரி முதல் டிசம்பர் வரை 22 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இருக்கிறோம்.

நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றை ஆராய்வதற்காக விண்கலங்களை அனுப்ப இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் எண்ம இந்தியா திட்டத்துக்குத் துணைநிற்க ஜிசாட் வரிசை செயற்கைக்கோள்களை அடுத்தடுத்து விண்ணில் செலுத்தவிருக்கிறோம்.

நிலவின் நிலப்பரப்பின் தன்மை, கனிமவளம், நீர் இருப்பு போன்றவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். சந்திரயான்-2 விண்கலத்தை 2019-ஆம் ஆண்டு ஜனவரி 3-இல் விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த இலக்கு தவறினால் மார்ச் மாதத்தில் தவறாமல் விண்ணுக்குச் செலுத்துவோம். இந்தத் திட்டத்துக்காக ரூ.800 கோடி செலவிடுகிறோம்.

எதிர்வரும் செப்டம்பரில் பிஎஸ்எல்வி-சி42 ரொக்கெட்டை விண்ணில் ஏவுகிறோம். அத்துடன் 2 விண்கலங்களும் அனுப்பப்படும். ஒக்டோபரில் ஜிசாட்-29, பிஎஸ்எல்வி-சி43, நவம்பரில் ஜிசாட்-11, ஜிசாட்-11ஏ, டிசம்பரில் ஜிசாட்-31, பிஎஸ்எல்வி-சி44 ஆகியவற்றை அடுத்தடுத்து விண்ணுக்கு செலுத்த இருக்கிறோம். ஜிசாட்-11 நவம்பர் 20-ஆம் திகதியும் ஜிசாட்-31 டிசம்பரிலும் அனுப்புவோம்.

நிலப்படக்கலை, கடலியல், நுண்ணலை படக்கலை உள்ளிட்டவற்றுக்காக 3-ஆம் தலைமுறை செயற்கைக்கோள்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஜிசாட்-19, ஜிசாட்-20, ஜிசாட்-21 ஆகிய செயற்கைக்கோள்கள் உயர்வேக இணையதளத்தை இந்தியாவுக்கு வழங்க உதவியாக இருக்கும். ஜிசாட்-30 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏரியன்ஸ்பேஸ் தளத்தில் இருந்து ஏவப்படும்.

2019-20-ஆம் ஆண்டில் பிஎஸ்எல்வி ரொக்கெட்டை தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ரொக்கெட் விண்கல தயாரிப்பில் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவுள்ளோம். அதேபோல மாணவர் செயற்கைக்கோள்களை ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

நாடு முழுவதும் 6 அறிவியல் ஊக்குவிப்பு மையங்களை நிறுவுவோம். இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் திறமையை இஸ்ரோவுக்கு வழங்க இது உதவியாக இருக்கும். இஸ்ரோவின் பணிகளைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களை அனுமதிக்க இருக்கிறோம். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்கலங்களை விண்ணில் ஏவும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

8 -ஆம் வகுப்புமுதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறோம். இளம் தலைமுறையை விஞ்ஞானிகளாகத் தயார்படுத்த இது உதவும். இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு இஸ்ரோவில் 25 நாட்களுக்கு பயிற்சி அளிப்போம். ஆய்வுக்கூடங்களைப் பார்வைடுவதற்கு மட்டுமல்லாது சொந்தமாக செயற்கைக்கோள்களைத் தயாரிக்கவும் மாணவர்களை ஊக்குவிப்போம். நன்றாக இருந்தால் அவற்றை விண்ணில் செலுத்துவோம்.

நாட்டு மக்களுக்கு அவரவர் மொழியில் விண்வெளி அறிவியலை போதிக்கும் வகையில் இஸ்ரோ தொலைக்காட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3-4 மாதங்களுக்குள் இதுசெயல்படும். தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். மக்களிடையே அறிவியல் உணர்வை வளர்த்தெடுக்க இது உதவும் என்றார் அவர்.


Add new comment

Or log in with...