மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் தொழிற்சங்கப் போராட்டங்கள் | தினகரன்

மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் தொழிற்சங்கப் போராட்டங்கள்

நாட்டில் அடிக்கடி இடம்பெறுகின்ற வேலைநிறுத்தங்கள் பொதுமக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. மருத்துவம், போக்குவரத்து, நீர்வழங்கல், மின்விநியோகம், கழிவுப் பொருள் முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளாக உள்ளன. இவ்வாறான சேவைகள் முடங்கும் வேளையில் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எமது நாட்டில் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் அடிக்கடி இடம்பெறுகின்ற ஒன்றாகும். அரசாங்க வைத்தியசாலைகளின் சேவைகள் முடங்கிக் கொள்வதனால் நோயாளர்களுக்கு உண்டாகின்ற பாதிப்புகளை இங்கு விபரிக்க வேண்டியதில்லை. உரிய வேளையில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போனதால் நோயாளர்கள் உயிரிழந்தும் போயிருக்கிறார்கள். இவ்வாறான துயரம் நேரும் போது பொதுமக்களால் மருத்துவர்கள் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகின்றார்கள்.

இது போன்றதே போக்குவரத்து சேவையில் அவ்வப்போது இடம்பெறுகின்ற வேலைநிறுத்தங்கள் ஆகும். போக்குவரத்து சேவையாளர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதனால் அரசாங்கத்தினால் அக்கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வை காண முடியாமல் போய்விடுகின்றது. அதேசமயம் போதிய கால அவகாசம் வழங்காமல் வேலைநிறுத்தத்தில் இறங்குகின்ற வேளையில், போக்குவரத்து சேவை முற்றாக முடங்கிப் போய், மக்கள் அனுபவிக்கின்ற சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ரயில்வே தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின் போதும் இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையே நாட்டில் ஏற்பட்டது.

புகையிரத சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஊழியர்கள், மாணவர்கள் என்றெல்லாம் தினம்தோறும் இலட்சக்கணக்கானோர் புகையிரதங்களிலேயே பயணம் செய்து வருகின்றனர். புகையிரதத் திணைக்களம் நஷ்டத்தில் இயங்கி வருவது ஒருபுறமிருந்தாலும், அச்சேவையினால் மக்கள் அடைகின்ற பயன் அதிகம். தூர மற்றும் குறுகிய தூர போக்குவரத்தில் குறைந்த தொகைக் கட்டணத்தில் பயணம் செய்வதற்கு புகையிரத சேவை உதவுகின்றது. அத்துடன் புகையிரத ஆணைச்சீட்டு (வரண்ட்) மூலம் அரசாங்க ஊழியர்கள் பெறுகின்ற சலுகை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான புகையிரத சேவை ஸ்தம்பிக்கின்ற போது, பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஊழியர்கள், நோயாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என்றெல்லாம் பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் இவ்வாறான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டமை நியாயமானதல்ல.

உயர்தர வகுப்பு மாணவர்களின் வாழ்வில் இப்பரீட்சையானது எத்தனை முக்கியதுவம் வாய்ந்ததென்பதை இத்தொழிற்சங்கங்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனது ஏன் என்பதுதான் அனைவர் உள்ளத்திலும் எழுகின்ற வினா!

பதின்மூன்று வருடங்களாக பாடசாலையில் கற்கின்ற மாணவர்களின் இறுதி அறுவடையாக க. பொ. த. உயர்தரப் பரீட்சை நோக்கப்படுகின்றது. இப்பரீட்சையைத் தவற விடுகின்ற போது அம்மாணவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. இறுதிப் பரீட்சைக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள், போக்குவரத்து வசதியின்றி நிர்க்கதியாகி கலங்கிப் போய் நிற்பதென்பது எத்தனை பரிதாபம்!

மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியாமல் போன தொழிற்சங்கத்தினர் ஏனைய மக்களைப் பற்றி நிச்சயம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை.

போக்குவரத்துத் துறையாகட்டும், இல்லையேல் மருத்துவத் துறையாகட்டும்... இக்காலத்தில் நடைபெறுகின்ற அனைத்து வேலைநிறுத்தங்களின் பின்னணியிலும் அரசியல் தொடர்பொன்று நிட்சயம் இருக்கவே செய்கின்றது. அத்தியாவசிய சேவைகளை முற்றாக முடக்கி, பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுத்துவதன் மூலம், அரசுக்கு எதிரான சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சில தொழிற்சங்கங்கள் முற்படுகின்றன.

வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்படுகின்ற போதெல்லாம், அரசாங்கத்தின் மீதுதான் மக்கள் குற்றம் கூறுவர். இதன் மூலம் அரசாங்கத்திடமிருந்து பொதுமக்களை அந்நியப்படுத்திக் கொள்ளலாமென்று அரச எதிர்ப்பு சக்திகள் நினைக்கின்றன.

நாட்டில் அடிக்கடி நடத்தப்படுகின்ற அரசாங்க மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களின் போதெல்லாம் அரசு மீதுதான் நோயாளர்கள் வசைமாரி பொழிந்ததைக் காண முடிந்தது.

அரசாங்க மருத்துவர் சங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைகளின் நியாயத் தன்மை குறித்தோ, அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு உள்ள சங்கடங்கள் குறித்தோ பொதுமக்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. சேவைகள் முடங்கிப் போய் சிரமங்கள் ஏற்பட்டதும், எதனையுமே ஆராயாமல் அரசுமீது வசைமாரி பொழிவது ஆரம்பமாகி விடுகின்றது.

அரசாங்க வைத்தியர்களைப் பொறுத்தவரை வேறெந்தவொரு நாட்டிலுமே இல்லாத சலுகைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். கடமை நேரம் தவிர்ந்த வேளைகளில் தனிப்பட்ட மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியும் அரசாங்க வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவையிலும் சாரதியின் மாதச் சம்பளம் மிகவும் அதிகமானதாகும். எனினும் அவர்கள் இதனைவிட மேலும் கூடுதலாக வேதனம் கோருகின்றனர். எந்தவொரு தொழிற்சங்கமானாலும் அரச தரப்புடன் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு முதலில் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்படுவதற்கு முன்பாக வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமல்ல.

பொதுமக்களின் சிரமங்கள் குறித்தும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையேல் மக்களுக்கான சேவையென்பதே அர்த்தமில்லாமல் போய்விடும்.


Add new comment

Or log in with...